ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார்
ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை அவரை ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த 13-ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், (ஜூன் 28) காலை ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், மாநில முதல்வராக பதவி வகித்து வந்த சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இது தொடர்பாக மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வராக பதவியேற்க உரிமை கோரினார்.
முன்னதாக, ஹேமந்த் சோரன் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.