நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்… 30 பயணிகள் படுகாயம்

பிரேசிலியா,

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஏர் ஐரோப்பா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 325 பயணிகள் இருந்தனர்.

இந்தநிலையில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென குலுங்கியது. இதில் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். இதனால் பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.

இதில் விமானத்தின் சில பாகங்கள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. இதனால் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். அப்போது பிரேசிலில் தரையிறங்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

மேலும் படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து வேறு விமானம் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே பயணிகள் சிலர் விமானம் குலுங்கியபோது தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அதில் விமானத்தின் சில பாகங்கள் உடைந்து தொங்குவதும், ஒரு பயணி தலைக்கு மேல் இருக்கும் கபார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி இருந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.