நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறுவது என்ற இலக்குடன் தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கையெழுத்துகள் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 28-ம் தேதி நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிட்டவில்லை. இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. அரசு உத்தரவு (Communal G.O.) மூலம்தான் இங்கு நம்மில் பலபேர் படித்து முடித்தோம். இன்று நம்மில் பலர் இதை மறந்து விட்டார்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்.
நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். காரணம் என்ன… அப்போதெல்லாம் ஊரில் ஒரே பி.ஏ-தான் இருப்பார். இப்பொழுது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.ஏ, பி.இ என போர்டு தொங்குகிறதா? அதற்கு காரணம், ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். யார் இந்த வளர்ச்சிக்கு காரணம்… இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது என்பதை நான் மாநிலங்களவையிலேயே கூறினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88