தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் . கோயம்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்வதோடு நாட்டுமாடுகளும் வளர்த்து வருகிறார். இயற்கையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால், கடந்த 25 ஆண்டுகளாக சிறு துளி, ரோட்டரி போன்ற அமைப்புகளுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மரங்களை தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு வளர்த்து வருகிறார்.
சமீபத்தில், இவர் தன்னுடைய இரண்டு மகன்களின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சென்றுவந்தார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பயணத்தின்போது அங்குள்ள பூங்காக்கள், ஏரிகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், விவசாயப் பண்ணைகள் என பல இடங்களுக்கு சென்றதோடு, விவசாயிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த பயண அனுபவம் குறித்து நம்மிடம் பேசிய ஜி.கே. நாகராஜ். “கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றேன். இரண்டு நாடுகளிலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். அது என்னவென்றால் நம் இந்தியர்கள் அங்கு அதிகம் வாழ்கின்றனர். மேலும், காலை வேளையில் யோகாவிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சிகாகோவிற்கு சென்ற போது அங்குள்ள மக்கள் மெக்சிகன் ஏரியை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு பூரிப்படைந்தேன். ஏனென்றால் ஒரு துண்டு குப்பையைக் கூட காண முடியவில்லை. இயற்கை வளத்தை மக்களால் மட்டுமே பேண முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். அங்குள்ள மக்கள் இயற்கை வளத்தை பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை கவர்ந்தது.
அவர்கள் அனைவரும் இயற்கையுடன் ஒன்றி வாழ்கின்றனர். நான் சென்ற இடங்களில் சுற்றுப்புறத்தை மிகத் தூய்மையாக வைத்திருக்கின்றனர். நல்ல பராமரிப்பை மேற்கொள்கின்றனர். நீர்நிலைகளில் எந்த ஒரு பொருளையும் காண முடியவில்லை. இயற்கைக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் நீளமான தொங்கு பாலம் அமைத்து அது சுற்றுலாத்தளமாக மாற்றி வைத்திருக்கின்றனர்.
பிறகு அட்லாண்டா தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம். அங்கு அரிய வகை தாவரங்கள், பழமரங்கள், விலங்குகள் போன்றவை நன்கு பராமரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. இவை அனைத்தும் காட்சிக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மற்றும் இதர நோக்கங்களுக்காகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிறகு அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்ட்ராபெர்ரி தோட்டத்திற்கு சென்றோம். அங்கு நாமே நேரடியாக பழங்களை பறித்து சாப்பிடும் அனுபவம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் அந்தப் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழச் சாகுபடி இயற்கை விவசாய முறையில் பராமரித்து வருகின்றனர். இப்படி விவசாயப் பண்ணைகளுக்கு சுற்றுலா வருபவர்களை ஊக்குவிக்கிறார்கள். விவசாயத்துக்கு ஆள்கள் பற்றாக்குறை காரணமாக பண்ணையாளர்கள் முடிந்தவரை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்கின்றனர். நவீன தொழில்நுட்ப முறைக்கும் இயற்கை விவசாயம் ஏற்றது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பாசனத்திற்கெல்லாம் குறைந்தளவு நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். அதி நவீன இயந்திரங்களை பயன்படுத்தி அதிக வருமானம் எடுத்து வருகின்றனர் அங்குள்ள விவசாயிகள்.
அமெரிக்க பயணம் முடிந்து லண்டன் சென்றபோது அங்குள்ள மக்கள் தேம்ஸ் நதியை பராமரிப்பதைப் பார்த்து அசந்து போனேன். ஆற்றை பராமரிக்கும் விஷயத்தில் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. இயற்கைக்கு பொருந்தி போகிற விஷயங்களைத்தான் முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதை இங்கிலாந்து அரசு செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ளதை போல வெயில், மழை, குளிர் என்று மூன்று விதமான பருவ காலங்கள் அங்கு இல்லை. கோடைக்காலம் ( 3 மாதங்கள்) தவிர அனைத்தும் மாதங்களும் குளிர் காலமாக இருக்கிறது. இருந்தாலும் விவசாயத்தை சவாலாக எடுத்து செய்து வருகின்றனர்.
லண்டன் நகருக்கு அருகே ஒரு மாட்டுப்பண்ணையைப் பார்வையிட்டோம். கோடைகாலத்தில் பசும்புல்லை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைத்து குளிர்காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் விவசாயிகள். பால் உற்பத்தியை விட இறைச்சிக்காகவே அதிகம் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணை முறைகளில் மட்டுமே மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவது குறைவாக உள்ளது. அதேபோல லண்டன் மாநகரில் சைக்கிள் பயணத்துக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ளது போன்ற மண் வளம் அங்கு இல்லை. நம்மிடம் அதிகளவு மண் வளமும், மனித சக்தியும் உள்ளது. அதை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவிற்கு முன்னேறலாம். விவசாயத்தை இரண்டாந்தர தொழிலாக பார்க்கும் நிலை மாற வேண்டும். விவசாயம் வருமானம் கொடுக்கும் தொழிலாக மற்ற நாடுகளில் பார்க்கப்படுகிறது. அதை முறையாகவும் செய்கிறார்கள். நாமும் அந்த நிலைக்கு வளர வேண்டும்” என்று பகிர்ந்துகொண்டார்.