'பாடப்புத்தகமும் இல்லை; ஆசிரியரும் இல்லை' – 12ம் வகுப்பு மாணவர்கள் விருதுநகர் ஆட்சியரிடம் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் நடக்கும் அவலங்களை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகாசி அருகே உள்ள நாரணபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேல்நிலைப்பள்ளியாக இருந்த போதும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்தில் முறையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

மனு அளிக்க வந்தவர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஆங்கில பாட ஆசிரியர் இல்லை. பள்ளி திறந்து இரண்டு மாதம் ஆன நிலையில் உயிரியல் பாடப்புத்தகங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. உயிரியல் பாட ஆசிரியர் தனது கையோடு எடுத்துவரும் ஒரே ஒரு பாடப்புத்தகத்தை வைத்துதான் இன்றுவரையிலும் நாங்கள் படித்து வருகிறோம். புத்தகமே வழங்கப்படாமல் இதுவரை எங்களுக்கு ஐந்து பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளுக்கு எங்களுக்கு எந்த பதிலும் தெரியவில்லை. பள்ளியில் கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. மாணவ மாணவிகளுக்கு சரியான குடிநீர் வசதி இல்லை. மேலும், கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு 6, 7-ம் வகுப்பு மாணவ- மாணவிகளையே ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மாணவர்களின் உடல் வலிமையை வளர்ப்பதற்கு விளையாட்டு உபகரணங்கள் அவசியமாகும். ஆனால் எங்களது பள்ளியில் அப்படி எந்தவொரு உபகரணங்களும் இல்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள் மாவட்ட அளவிலும், வெளி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் எங்களது பள்ளி மாணவ மாணவிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து கல்வி மாவட்ட அதிகாரிகள் மற்றும் மற்ற ஆசிரியர்களிடம் சொன்னாலும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

ஆட்சியர் அலுவலகம்

ஆகவேதான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தோம். பொதுவாகவே, எங்களின் குறைகள் என்னவென்று காதுகொடுத்து கேட்பதற்கு எந்த அதிகாரிகளும் தயாராக இல்லை. பள்ளி நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும், பள்ளியில் உங்களுக்கு தேவையான அனைத்தும் விரைவில் செய்துத்தரப்படும் என ஒப்புக்காக சொல்லும் வார்த்தைகளை நம்பி நாங்கள் ஏற்கனவே நிறையமுறை ஏமாந்து விட்டோம். இம்முறையாவது எங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று பேசினர்.

மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “தினமும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பாடப்புத்தகங்கள் தேவை தொடர்பான கோரிக்கைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. இது அரசின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் பாடப்புத்தகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்களை களைந்து, தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கிறோம். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.