பிரதமரின் பதிலுரையுடன் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதலுரையுடன் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

18வது மக்களவை முதல்முறையாகக் கூடியதைத் தொடர்ந்து மாநிலங்களவையின் சிறப்பு அமர்வு தொடங்கியது. இந்த அமர்வின்போது, குடியரசுத் தலைவரின் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று எம்.பி.,க்கள் பலரும் பேசினர். இதையடுத்து, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். அவரது உரை நிறைவடைந்ததை அடுத்து, அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். “6 தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய ஜனநாயகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு அசாதாரண நிகழ்வு. ஆனால், சிலர் வேண்டுமென்றே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் (எதிர்க்கட்சிகள்) பெரும் சத்தத்தை உருவாக்கி நாட்டு மக்களின் இந்த முக்கிய முடிவை மறைக்கப் பார்க்கின்றனர்.



10 ஆண்டுகளாக உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் நாங்கள் செய்த பணிகளுக்கு நாட்டு மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள். எங்களை மிகவும் நேசித்தார்கள். தேர்தலின் போது எனது நாட்டு மக்கள் வெளிப்படுத்திய அறிவாற்றல் குறித்து நான் பெருமைப்படுகிறேன். எனது நாட்டு மக்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் 10 ஆண்டுகால எங்கள் ஆட்சியின் மைல்கல் முத்திரை மட்டுமல்ல, எதிர்காலத் தீர்மானங்களுக்கு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதற்கான அத்தாட்சியாகவும் இருந்தது. நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், எங்கள் மீது மட்டுமே!

இந்தத் தேர்தல், கடந்த 10 ஆண்டுகால சாதனைகளுக்கான ஒப்புதல் முத்திரை மட்டுமல்ல, இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத் தீர்மானங்களுக்கும் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டு மக்கள் எங்கள் மீது ஏக நம்பிக்கை வைத்திருப்பதால், நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “பிரதமர் மோடி தவறான தகவல்களை அவையில் தெரிவிக்கிறார். பொய் சொல்வது அவரது வழக்கமாக உள்ளது. உண்மைக்கு மாறாக மக்களை அவர் தவறாக வழிநடத்துகிறார்.

அரசியல் சாசனம் குறித்து நீங்கள் (பாஜக) எங்கே பேசினீர்கள், அரசியல் சாசனத்தை நீங்கள் உருவாக்கவில்லை. உங்கள் ஆட்கள் அதற்கு எதிராக இருந்தார்கள் என நான் அவருக்கு தெரிவித்தேன். இந்தியாவின் வரலாறு குறித்து அரசியல் சாசனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் அரசியல்சாசனத்தின் மிக மோசமான அம்சம் என ஆர்எஸ்எஸ் தனது தலையங்கத்தில் தெரிவித்திருந்தது. அவர்கள் அரசியல் சாசனத்தை எதிர்த்தார்கள். அம்பேத்கர், நேரு ஆகியோரின் உருவ பொம்மைகளை அவர்கள் எரித்தார்கள். ஆனால், தற்போது நாங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவர்கள் என பிரதமர் கூறுகிறார்” என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்துப் பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “மூத்த உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். பிரதமரின் உரையின்போது அவர்கள் ஏற்படுத்திய இடையூறு, இந்த அவையின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தது. அவர்களின் வெளிநடப்பு மிகவும் வேதனையாக இருந்தது. இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.