மதுரை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 3-வது நாளான இன்று (ஜூலை 3) வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கிய ஊர்வலம் தல்லாகுளம் வரை நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தல்லாகுளம் தலைமை அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிடுவார்கள் என நினைத்து தபால் அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்ற கிளை: உயர் நீதிமன்ற கிளை பார் அசோசியேசன் (எம்எம்பிஏ) பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஐசக் மோகன்லால் தலைமையில், பொதுச் செயலாளர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2 மத்திய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளை முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஎச்ஏஏ) கூட்டம் சங்கத் தலைவர் ஆண்டிராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.