அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடக்க இருக்கிறது. டி20 போட்டிகள் வருவதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளுக்கு அடுத்தபடியாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் தான் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக இருந்தது. இதுவரை 8 முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் நடைபெற்றிருக்கிறது. 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. பிப்வரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை இந்த தொடரை நடத்த பாகிஸ்தான் உத்தேசித்துள்ளது. அதற்கான அட்டவணையையும் தயாரித்திருக்கும் பாகிஸ்தான், இதனை ஐசிசிக்கும் அனுப்பியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8ல் இருக்கும் எட்டு அணிகளும் பங்கேற்க இருக்கின்றன.
துருதிஷ்டவசமாக ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 இடங்களுக்குள் இடம்பெறாத வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் இந்த தொடரில் பங்கேற்காது. மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் விளையாட சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இருநாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் சூழல் காரணமாக மத்திய அரசு இந்திய கிரிக்கெட்அணியை பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்ப அனுமதி வழங்கவில்லை.
இம்முறையும் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது பிசிசிஐ. மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லும். ஒருவேளை இந்திய அணி செல்லவில்லை என்றால், ஐசிசி ஒட்டுமொத்தமாக போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடம் உள்ளிட்டவைகளை மாற்ற வேண்டியிருக்கும். இப்போதைய உத்தேச அட்டவணைப்படி, மார்ச் ஒன்றாம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி லாகூரில் நடைபெறும். அதே மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்லவில்லை என்றால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அப்போதே, பாகிஸ்தான் நாட்டுக்கு இந்தியா கிரிக்கெட் விளையாட வந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்ற நிபந்தனையையும் விதித்தது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை என்றால், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு அந்த அணி இந்தியாவுக்கு வரமால்கூட போக வாய்ப்பு இருக்கிறது.