சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணைகளை வழங்கினார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் இரா.கனகராஜ் மற்றும் சிறைத் துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில் மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.
கடந்த 2023-2024-ம் ஆண்டில் சிறைவாசிகளின் நலனுக்கான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முறை மற்றும் உணவின்அளவு ரூ.26 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 600 சிசிடிவி கேமராக்கள் ரூ.11.50 கோடியில் நிறுவப்படவுள்ளது. நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான், ஊடுகதிர்அலகிடும் கருவி போன்ற நவீன உபகரணங்கள் ரூ.5.98 கோடியில் நிறுவப்பட்டுள்ளன.
தொலைபேசி அழைப்புகள்: சிறைவாசிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் பேச மாதம் 10 தொலைபேசி அழைப்புகள் செய்திடவும் (ஆடியோ மற்றும் வீடியோ), சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை காவல்துறை அங்காடியில் விற்பனை செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறை நூலகங்களை மேம்படுத்திட ரூ.2.09 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார். தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நபர்களுக்கு வேலூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.