Doctor Vikatan: என்னுடைய தோழியின் வீட்டில் தினமும் எல்லோரும் குல்கந்து சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். குல்கந்து எந்த அளவுக்கு ஆரோக்கியமானது… அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது… எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
பல வருடங்களாக நம்முடைய உணவுகளில் இடம்பெற்றுத் தொடரும் பாரம்பர்யங்களில் ஒன்று குல்கந்து. இதை தினமுமே சாப்பிடலாம், தவறில்லை.
ஆயுர்வேத மருத்துவத்தில் குல்கந்து முக்கியமான மருந்தாகவே பரிந்துரைக்கப்படுகிறது. உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய தன்மை கொண்டது குல்கந்து. அசிடிட்டி, குடல் தொடர்பான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், அரிப்பு, கொப்புளம் உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், உடல் சூடு அதிகரிப்பதால் உண்டாகக்கூடிய அனைத்துப் பிரச்னைகளுக்குமே குல்கந்து மிகச் சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும். மலச்சிக்கல் பிரச்னைக்கும் இது மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பிரச்னைக்கும் இதில் நல்ல பலன் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மையும் குல்கந்துக்கு உண்டு.
குல்கந்து எனப்படுவது ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் சர்க்கரை சேர்க்கப்படும். சிலர் தேன் சேர்த்தும் தயாரிக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவகையில், இதில் ஸ்டீவ்யா எனப்படும் செயற்கை இனிப்பூட்டி சேர்த்தும் தயாரிக்கிறார்கள். ரோஜா இதழ்களை வெயிலில் காயவைத்து, மூன்று- நான்கு வாரங்கள் கழித்து, அதில் சர்க்கரையோ, தேனோ சேர்த்து குல்கந்து தயாரிக்கப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு குல்கந்து சாப்பிடலாம். ரத்தச்சோகை, சருமப் பிரச்னைகள், குடல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள், தினமும் இருவேளை கூட இதை எடுத்துக்கொள்ளலாம். குல்கந்தை அப்படியே சாப்பிடலாம், சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் அதன் சுவை மிகவும் பிடிக்கும். சிலர், இதை பாலில் கலந்தும் குடிக்கிறார்கள். குல்கந்து மில்க் ஷேக் போன்று செய்து கொடுப்பதால் குழந்தைகள் அதன் சுவை மற்றும் நிறத்தைப் பார்த்து மறுக்காமல் குடிப்பார்கள். அதனால் பாலின் நல்ல தன்மைகளும் கூடுதலாக உடலுக்குக் கிடைக்கும்.
நீரிழிவு உள்ளோர், அலர்ஜி பாதிப்பு உள்ளோர் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே குல்கந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.