Indian 2: "ஷங்கர் சார் கொடுத்த ட்விஸ்ட்…" – `கதறல்ஸ்' பாடல் உருவான விதம் குறித்து பாபா பாஸ்கர்

`இந்தியன் – 2′ படத்தின் `கதறல்ஸ்’ பாட்டுதான் சோஷியல் மீடியா எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஷங்கர் படங்களில் வரும் பிரமாண்ட பாடல்கள் வரிசையில்  இந்தப் பாடலும் இடம்பெறும் என்பது அதன் மேக்கிங்கைப் பார்த்தாலே தெரிகிறது. இந்த பாடல் உருவான விதம் குறித்து நடன இயக்குநர் பாபா பாஸ்கரிடம் பேசினோம்.

‘கதறல்ஸ்’ வாய்ப்பு எப்படி வந்தது..?

“நான் சினிமாவில் ரஜினி சாரோடும் கமல் சாரோடும் வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ‘பேட்ட’ படத்தில் ரஜினி சாரோடு வேலை பார்த்துட்டேன். கமல் சாருகூட வேலை பார்க்கிறது மட்டும் நடக்காமலே இருந்தது. ஷங்கர் சார் ஆபிஸிலிருந்து போன் பண்ணி, ”இந்தியன் – 2′ படத்தில் ஒரு சாங் பண்ணணும்’னு சொன்னப்போ அந்த ஆசையும் நிறைவேறிடுச்சுன்னு சந்தோஷமாக ஷங்கர் சாரை பார்க்கப் போனேன். அங்கதான் ஷங்கர் சார் ஒரு ட்விஸ்ட் வெச்சார். ‘இந்த பாட்டில் கமல் சார் இருக்க மாட்டார். ஆனால், இந்தியன் தாத்தாவோட வருகையை சொல்ற மாதிரி இந்தப் பாட்டு இருக்கும்’னு சொன்னார். சரி… கமல் சார் படத்துல இவ்வளவு பெரிய பாட்டு கிடைக்குதே. இதை சூப்பரா பண்ணிடுவோம்னு இறங்கி வேலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

ஷங்கர் சார் இந்தப் பாட்டை ரொம்ப பிரமாண்டமாக ப்ளான் பண்ணியிருந்தார். இதுவரைக்கும் நான் 500 டான்சர்களை வச்சு பாட்டு பண்ணதேயில்லை. அந்தளவு என் கரியரோட ஒரு பெரிய பாட்டாக ‘கதறல்ஸ்’ பாட்டு அமைச்சிருக்கு. ஷங்கர் சாரும் பாட்டைப் பார்த்து, ‘ரொம்ப சூப்பராகப் பண்ணிட்டீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு பாராட்டினார். இந்தப் பாட்டு சூப்பராக வந்ததற்கு மிக முக்கியமான காரணம் அனிருத்தான். அவர் போட்டுக்கொடுத்த செம ட்யூனாலதான் என்னால ரொம்ப நல்லா கோரியோ பண்ண முடிஞ்சது. இந்தப் பாட்டுக்காக நான் கேட்ட எல்லா விஷயத்தையும் ஷங்கர் சாரும் தயாரிப்பாளரும் பண்ணிக்கொடுத்தாங்க. அதுதான் இந்தப் பிரமாண்டத்திற்குக் காரணம்.”

‘இந்தியன் – 2’ இசை வெளியீட்டு விழாவில் ஷங்கரின் மகனை ஆட வச்சது யாரோட ப்ளான்..?

அர்ஜித்

“முதலில் சித்தார்த்தான் அந்த நிகழ்ச்சியிலும் டான்ஸ் ஆடுற மாதிரி இருந்தது. ஆனால், அவர் அந்த தேதியில் ஊருல இல்லாதனால என்ன பண்ணலாம் யோசிச்சிட்டு இருந்தோம். அப்போ ஷங்கர் சாரோட பொண்ணு அதிதியை ஆட வைக்கலாமானு ஒரு யோசனை சொன்னாங்க. சமீபத்தில் ஷங்கர் சாரோட பொண்ணு கல்யாணத்தில் சாரோட பையன் அர்ஜித் ஆடுன வீடியோஸ் பார்த்தேன். அவரைக் கேட்கலாம்னு ஷங்கர் சார்கிட்ட கேட்டப்போ, ‘மாஸ்டர் அவன் என் பையன். அவனும் சினிமாவுக்குதான். அவனை யூஸ் பண்ணிக்கோங்க. மோசமா ஆடுனா மட்டும் நல்லா சரி பண்ணிடுங்க’னு சொன்னார். ஆனால், அந்த பையன் வந்து ஆடுனான்; என்னா எனர்ஜி அவனுக்கு! செமையா ஆடுனான். தான் ஒரு பெரிய ஆளோட பையன்னு எந்தப் பந்தாவும் இல்லாமல் கூலா இருந்தான். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. ‘நல்லா ஆடுறேனா மாஸ்டர்’னு கேட்டுட்டே இருந்தான். நிச்சயமா அவன் ஒரு ஸ்டாராக வருவான். அந்தளவுக்கு அவனுக்குள்ள திறமை இருக்கு.”

‘குப்பத்து ராஜா’ படத்துக்கு அப்பறம் ஏன் அடுத்த படம் இயக்கவில்லை..?

குப்பத்து ராஜா

“‘குப்பத்து ராஜா’ சரியா போகலைனு சொல்றாங்க. அதுக்கான முழுக் காரணமும் நான்தான். ஒரு இயக்குநராக அந்தத் தப்பு எல்லாத்துக்கும் நானே பொறுப்பேத்துக்கிறேன். எந்த இடத்துல விழுந்தேனோ அதே இடத்துல ஹிட் குடுக்கணும்னு நினைக்கிறேன். இப்போ அதுக்கான வேலைகள் போயிட்டு இருக்கு. நேரம் கூடி வரும் போது நிச்சயமாக அடுத்த படத்தை இயக்குவேன். முதல் படத்தில் நடந்த தப்பு அடுத்த படத்தில் நடக்காதுன்னு இப்போ உறுதியா சொல்லிக்கிறேன்.”

சினிமா மாதிரி சின்னத்திரையிலும் ரொம்ப ஃபேமஸான ஆளா இருக்கீங்களே..?

குக்கு வித் கோமாளியில் பாபா பாஸ்கர்

“அதுக்கு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குதான் நான் நன்றி சொல்லணும். அந்த நிகழ்ச்சி போனதுக்கு அப்பறம்தான் எனக்கு நிறைய அன்பு கிடைச்சிருக்குனு சொல்லணும். அடுத்தடுத்து டிவி ஷோக்களுக்குக் கூப்பிட்டாங்க. ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியோட தயாரிப்பாளர், இயக்குநர், அப்பறம் கோமாளிகள் எல்லாருமே ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. என்னை எப்படி இந்த நிகழ்ச்சிக்கு செலக்ட் பண்ணுனாங்கனு எனக்கே தெரியலை.

‘இந்தியன் – 2’ ஷூட்டுக்காக எண்ணூரில் இருந்தப்போ, அங்க இருந்த மீனவ மக்கள் எல்லாரும் எனக்காக மீன், இறால், நண்டுனு எல்லாமே சமைச்சு எடுத்துட்டு வந்து என்னைச் சாப்பிட வைப்பாங்க. ‘எங்க மாஸ்டர்; எங்க மாஸ்டர்’னு அவ்வளவு அன்பா இருப்பாங்க. இதெல்லாம் எனக்கு அந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் நடந்துச்சு.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.