TVK Vijay: `நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது; ஒன்றிய அரசு..!’ – மாணவர்கள் மத்தியில் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக பேசினார்.

மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த பின்னர் மைக் பிடித்த விஜய், “இன்று பேச வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசாமல் விட்டால் நன்றாக இருக்காது. அதுதான் நீட். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமம்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. இந்த நீட் தேர்வை பொறுத்தவரை மூன்று பிரச்னைகள் முக்கியமானவை. அதில் முக்கியமானது நீட் மாநிலக் உரிமைக்கு எதிராக இருக்கிறது. 1975-க்கு முன்னாள் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. 1975-க்குப் பிறகுதான் அதை ஒன்றியப் பட்டியலில் சேர்த்தார்கள். எனக்கு தெரிந்து முதல் பிரச்னை அப்போது தான் தொடங்கியது.

ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கிறேன். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பல்வீனமல்ல. அதுதான் பலம்.

மாநில மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, NCERT பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் கிராமப் புறத்தில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக மருத்துவத் துறை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய கடினம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த தேர்வும், அதைத் தொடர்ந்து வெளிவந்த நீட் குளறுபடிகள் தொடர்பான செய்திகளையும் பார்த்தோம். அதற்குப் பிறகு நீட் தேர்வு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதை இந்த நிகழ்வுகள் மூலம் புரிந்துகொண்டோம்.

விஜய்

இதற்கான தீர்வு என்ன… நீட் விலக்கு மட்டும்தான் உடனடித் தீர்வு. நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து, இதை விரைவில் பரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக இந்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி, அதில், கல்வி, சுகாதாரத்துறையை இணைக்க வேண்டும்.

இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், மாநில அரசுகளுக்கு அதில் என்னதான் அதிகாரம் இருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பட்டில்தான் இருக்கிறது. எனவே, கல்வி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்த வேண்டுமானால் நடத்திக்கொள்ளட்டும்.

இது நடக்குமா… நடந்தாலும் அதை நடக்க விடமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தில் என் கருத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜாலியா படிங்க… இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஒன்று உங்களை விட்டு தவறுகிறது என்றால், அதைவிட வேறு ஒன்று பெரிதாக கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதை தேடி கண்டுபிடியுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.