நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குக் கடந்தாண்டு முதல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களையும் பரிசுத்தொகையையும் வழங்கி வருகிறார். இந்தாண்டு இந்த நிகழ்வை இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரிலுள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடத்தத் திட்டமிட்டார்கள்.
முதற்கட்டமாகக் கடந்த ஜூன் 28-ம் தேதி பல மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் பரிசுத் தொகையையும் வழங்கினார். இந்த நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. முதற்கட்ட நிகழ்வில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்துப் பேசியிருந்தார். இன்றைய நிகழ்வில் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.
விஜய் தனது கட்சி அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக நடத்தும் நிகழ்வு இது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்களை ஒருங்கிணைத்து கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இப்படியான நிகழ்வில் எவ்வித குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என விஜய்யும் கட்சி நிர்வாகிகளும் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்து அதற்காக பாண்டிச்சேரியிலிருந்து ஒரு கேட்டரிங் குழுவையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் நெகிழ வைக்கும் பல தருணங்களும் உதட்டோரத்தில் புன்னகையையும் வரவைக்கும் பல க்யூட் மொமென்ட்களும் நிகழ்ந்தன.
12-ம் வகுப்பு முடித்த பாரிஸ் என்ற மாணவர் விஜய்க்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். இது குறித்து அந்த மாணவர் நம்மிடையே பேசுகையில், “அது தீர்க்கதரிசி முகமது எவ்வாறு நாட்டை ஆண்டார் என்பது பற்றிய புத்தகம். அதுமட்டுமின்றி ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துடைய புத்தகமும் அது. அவரும் ‘நான் கண்டிப்பா படிக்கிறேன்’ன்னு சொன்னாரு” என்றார் மகிழ்ச்சியுடன்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விஜய்க்கு ஒரு ரோஜா பூவைக் கொடுத்து வாழ்த்துச் சொன்னார். மேடையிலிருந்து கீழே இறங்கியவரைச் சந்தித்துப் பேசினோம்.
“என்னுடைய பெற்றோருக்கு இதுவரை எந்த விஷயமும் கிடைத்தது இல்லை. என் மூலமாக இந்தப் பெருமை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இன்று அவர் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசியிருந்தார். நீட் தேர்வினால் என்னுடைய குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அக்கா நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் இப்போது நர்சிங் படித்துக்கொண்டிருக்கிறார். என்னுடைய தந்தைக்கு நான் கறுப்பு கோட் அணிந்து சட்டம் படிக்க வேண்டும் என்றும் என்னுடைய சகோதரி வெள்ளை கோட் அணிந்து மருத்துவம் படிக்க வேண்டும் என்றும் ஆசை. நான் சட்டம் படிக்கப்போகிறேன். விஜய் முதல்வராக வந்தால் என்னுடைய சகோதரியும் வெள்ளை கோட் அணிந்து மருத்துவம் பயில்வார்” என்றார்.
இதைத் தாண்டி பெண் ஒருவர் விஜய்யிடம், “நீங்கள் நல்லா இருக்கணும் நாடு முன்னேற…” என்ற எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி அரங்கத்தைக் கரவொலிகளால் நிரம்பச் செய்தார்.
மேலும் இந்தாண்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி நிவேதாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். விஜய்யிடம் சான்றிதழைப் பெற்ற பிறகு நம்மிடம் பேசிய நிவேதா, “அரங்கத்துக்குள்ள வந்ததும் விஜய் சார் என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. ‘இதோட விட்றாத தொடர்ந்து படி, உதவிகள் வேணும்னா என்கிட்ட கேளு நான் பண்ணித் தர்றேன்’னு சொல்லியிருக்காரு” என்றார்.
குறிப்பாக, இந்த நிகழ்வில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் பங்குபெற்று தன்னுடைய 2 மாத பெண் குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு கோரிக்கை வைத்தார். இதன் பிறகு மூன்று பெயர்களைப் பெற்றோர்களிடம் கேட்டறிந்து ‘தமிழரசி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் விஜய்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வு சரியாக மாலை 7.15 மணி வரை நடைபெற்றது.