Bajaj CNG Bike: கார், பைக் போன்ற வாகனங்கள் தற்போது வீட்டின் அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டது. மாணவர்கள் கல்லூரி செல்வது முதல் பெரியோர்கள் அலுவலகம் செல்வது வரை என பைக்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. நகரப் பகுதிகளில் தற்போது வீட்டுக்கு ஒரு காரையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் பலரும் புதிய மாடல் பைக் மற்றும் கார்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் நம்மால் பார்க்க முடியும்.
அந்த வகையில் நீண்ட காலமாக பலராலும் எதிர்பார்க்கப்படும் பைக் என்றால் அது Bajaj (பஜாஜ்) நிறுவனத்தின் முதல் CNG வகை பைக் தான். Bajaj இந்த பைக்கை எப்போது அறிமுகப்படுத்தும் என பலரும் காத்திருந்த நிலையில் இந்த பைக் நாளை அதிகாரப்பூர்வமாக (ஜூலை 5) அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக்கின் அறிமுகத்தை முன்னிட்டு சமீபத்தில் அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தது.
உலகின் முதல் CNG பைக்
தற்போது இந்த பைக்கிற்கு Bajaj Bruzer என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் அது உறுதிசெய்யப்படவில்லை. இந்த பைக் தான் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே முதல் CNG பைக் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த CNG வகை பைக் குறித்த அதிகம் பேச்சுகள் எழுந்திருந்தது. Bajaj நிறுவனம் இதன் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது எனலாம்.
இன்னும், இதுவரை இந்த பைக் குறித்த முக்கிய அம்சங்கள் எதுவும் உறுதியாகவில்லை. இருப்பினும், இந்த பைக் 100 முதல் 125cc உடன் வரலாம். எனவே இது அனைவராலும், எல்லா சூழலிலும் பயன்படுத்தும்வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கலாம். சமீபத்தில் வெளியான சில புகைப்படங்களில் அதன் டிசைனை ஊகிக்க முடிகிறது. அதன்மூலம்தான் இவை கணிக்கப்படுகிறது.
CNG டூ பெட்ரோல் – ஸ்விட்ச்
மேலும், இந்த பைக்கில் வழக்கம்போல் பெட்ரோல் டேங்க் இருக்கிறது, அதன் கீழே CNG சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் கசிந்தன. மெயின் ஃபிரேம் உடன் வட்ட வடிவ காப்புடன் அந்த CNG சிலிண்டர் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலில் இருந்து CNG அமைப்புக்கு மாற இந்த பைக்கில் ஒரு ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது, இது அதன் டீசர் வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் இந்த பைக் இரண்டு வேரியண்ட்களில் வரலாம் என்றும் தெரிவிக்கப்டுகிறது.
Bajaj நிறுவனம் எப்போதும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்தும், வாடிக்கையாளர்களன் பட்ஜெட்டை அறிந்தும் ஒரு தயாரிப்பை கொண்டு வருவதற்கு பெயர் பெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் நிறுவனம் உள்நாட்டு விற்பனையிலும், ஏற்றுமதியிலும் சேர்த்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 646 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும்போது 3% உயர்வாகும்.
விலை, மைலேஜ்
எனவே, இந்த CNG பைக் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் Bajaj நிறுவனத்தின் பைக் விற்பனை என்பது இன்னும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம். Bajaj நிறுவனத்தின் இந்த புதிய CNG பைக்கின் ஆரம்ப விலை சுமார் 90 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்டிற்கு சில ஆயிரம் ரூபாய் வித்தியாசம் மட்டுமே இருக்கும். இதற்கென தற்போது பிரத்யேகமாக போட்டியளிக்கக் கூடிய மாடல்கள் ஏதும் சந்தையில் இல்லை.
இருப்பினும், Hero Passion Pro விற்பனை என்பது சந்தையில் சற்று சறுக்கலை சந்திக்கலாம். Bajaj நிறுவனத்தின் இந்த பைக் சுமார் 70 முதல் 90 கி.மீ., வரை மைலேஜ் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை எவையும் இன்னும் உறுதியாகவில்லை. நாளை வரை காத்திருந்தால் முழு தகவல்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.