அஸ்தானா: எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வாங் யி-யை இன்று காலை அஸ்தானாவில் சந்தித்தேன்.
இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்துக்காக ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது அவசியம். பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்றும் நமது இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கஜகஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முராத் நூர்ட்லு, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோவ், பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ், தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சிரோஜிதீன் முஹ்ரிதீன், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் உள்ளிட்டோரை ஆஸ்தானாவில் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.