ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்

டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அதேநேரத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் எவ்வளவு நாட்கள் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இன்னும் 6 மாதங்கள் மட்டுமே ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடிக் கொள்ளட்டும் என கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்துள்ளாராம். 

எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு இனி 20 ஓவர் அணியில் இடம் இல்லை என்பதை முன்பே தெரிவித்த கம்பீர், உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணியின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தாராம். இதனை தெரிந்து கொண்ட பின்னர் தான் விராட், ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் அவசர அவசரமாக 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதும் ஓய்வை அறிவித்தனர். அப்போது பேசிய ரோகித் சர்மா, சூசகமாக இதனை தெரிவித்தார். சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன், அதனால் டி20 வடிவத்தில் ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன் என கூறியிருந்தார். மேலும் இளைஞர்கள் இங்கிருந்து இந்திய அணியை முன்னெடுத்து செல்வார்கள் என்றும் கூறியிருந்தார். 

ரோகித் சர்மாவின் இந்த பேட்டிக்கு பிறகு பேசிய கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 பார்மேட்டில் ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இருக்க முடியாது என்று வெளிப்படையாக கூறினார். அதேநேரத்தில் கம்பீர் அவர்கள் மூன்று பேருக்கும் 6 மாத டைம் என்ன? என்று பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 2025ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடர் வரை ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் பிளேயர்களும் இந்திய அணியின் ஒருநாள் போட்டி வடிவத்திலும், அடுத்து வர இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிக் கொள்ளலாம் என கம்பீர் தெரிவித்துவிட்டாராம். அதனால், அதிகபட்சம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வரை மட்டுமே இந்த மூன்று சீனியர் பிளேயர்களும் இந்திய அணிக்கான ஒருநாள் போட்டி வடிவத்தில் விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.