கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் புதுச்சேரி மாதேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தனால் கண்டறியப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 18-ம் தேதி, மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதைத்தொடர்ந்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி-யான கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு 21 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், புதுச்சேரி மடுகரை மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பன்சிலால், கவுதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் ஜூன் 28-ம் தேதி கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 1 -ம் தேதி விசரணைக்கு வந்த போது, 11 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து ஜூலை 1 முதல் 3 -ம் தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீராம் அனுமதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 3 நாள் விசாரணையை முடித்த சிபிசிஐடி போலீஸார் 11 பேரையும் நேற்று மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் முக்கியமானவரான புதுச்சேரி மடுகரை மாதேஷ் சிபிசிஐடி போலீஸாரிடம் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில், வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள செயல்படாத பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், விஏஓ முன்னிலையில் அந்த பங்குக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி தரப்பில் விசாரித்தபோது, “முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மாதேஷ் தனது வாக்குமூலத்தில் சென்னையைச் சேர்ந்த ரசாயன நிறுவனத்திலிருந்து 1 பேரல் ரூ. 11 ஆயிரம் என 19 பேரல் மெத்தனாலை வாங்கியதாக தெரிவித்துள்ளார். அப்படி வாங்கி வந்த மெத்தனாலை ஒரு பேரல் 40 ஆயிரம் வீதம் விற்றுள்ளார். இதற்காக பெரிய நெட்வொர்க்கை வைத்திருந்ததாகவும், முதல் விற்பனையை கள்ளக்குறிச்சியில் செய்ததாகவும் மாதேஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், கள்ளக்குறிச்சியில் எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இதர மாவட்டங்களுக்கு மெத்தனாலை விற்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் எஞ்சிய மெத்தனாலை செயல்படாத பெட்ரோல் பங்கில் பதுக்கி வைத்ததாக மாதேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, செயல்படாத பெட்ரோல் பங்கில் இருந்து 2,000 லிட்டர் மெத்தனாலைக் கைப்பற்றி இருக்கிறோம்” என்றனர்.