கோவையில் தனியார் செயலி ஒன்றில் பணத்தை முதலீடு செய்து, மோசடிக்கு உள்ளான பெண்கள் சிலர் கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்தில் நேற்று (03.07.2024) புகார் அளித்துள்ளனர்.
ஜி.எம்.ஆர் (GMR) என்கிற தனியார் நிறுவனம் செயலி ஒன்றின் மூலம் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை செய்துவந்தது. ‘தினமும் பத்து நிமிடம் வேலை, வாரந்தோறும் சம்பளம்’ என இல்லத்தரசிகளைக் குறி வைத்து, விளம்பரம் செய்துள்ளது.
இதில் முதலீடு செய்து லாபம் எடுத்த சிலர் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்தச் செயலியைப் பரிந்துரை செய்துள்ளனர்.
நெருங்கியவர்களின் பரிந்துரையினை நம்பி, இந்தச் செயலியில் 15,000 முதல் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பலரும் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முதலீடு செய்த பணத்தில் ஒரு ரூபாய் கூட திரும்பக் கிடைக்கப் பெறாமல், மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலில் நம்பிக்கையுடன் முதலீடு செய்தவர்கள், தாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வராததால், அது குறித்து தங்கள் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் மழுப்பலாக ஏதேதோ காரணங்களைக் கூறவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் சொன்னதாவது…
“ இந்த நிறுவனத்தின் ஆஃப்பில் 1800 ரூபாய் முதலீடு செய்து, VIP – 1 திட்டத்தில் சேர்ந்தோம். இது போல, ஒன்பது திட்டங்கள் இந்த ஆப்பில் உள்ளன.
அடுத்த கட்டமாக, 15,800 கட்டச் சொன்னார்கள். அந்தத் திட்டத்தில இணைந்தால், ‘கார், வீடு’ போன்றவைக் கிடைக்கும் என்றார்கள். அதை நம்பி அதிலும் முதலீடு செய்தோம். ஆனால், ஒரு ரூபாய் கூட திரும்பக் கிடைக்கவில்லை.
மூன்று மாதத்திற்கு முன்னாடி சேர்ந்தவர்கள் எல்லாரும், அவர்கள் முதலீடு செய்தப் பணத்தை எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கு பிறகு 200, 300 பேரை சேர்த்துவிட்டவர்களால் தான், ஒரு ரூபாயை கூட எடுக்க முடியவில்லை.
இப்போது எங்களுடைய வாட்ஸ்அப் குரூப்லேயே 400-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். அதில் மதுரை, ஈரோடு என பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து எங்களோட வாட்ஸ்அப் குரூப் மாதிரியே எட்டு வாட்ஸ்அப் குரூப் உள்ளது. ஒவ்வொன்றிலும் நூற்றுக் கணக்கானோர் இருக்கிறார்கள். தெரிந்ததே இவ்வளவு என்றால், தெரியாதது எவ்வளவோ? ” என்றனர்.
கோவையில் நடந்த இந்த மோசடியில் மொத்த எத்தனை பேர் பணம் கட்டியிருக்கிறார்கள், எத்தனை கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது என்கிற தகவல்களை காவல் துறை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்.
பணத்தை மட்டும் கட்டிவிட்டு எதுவும் செய்ய வேண்டாம்; நல்ல லாபம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அதை நம்புவதற்கு தமிழகத்தில் இன்னும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். எனவேதான் இவர்களை ஏமாற்ற புதிது புதிதாக நிறுவனங்கள் கிளம்பி வந்து, புதுப்புது மோசடிகளை நடத்துகின்றன. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அவர்களின் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!