நாய் எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அதோடு தனது எஜமானர்களையும் நாய்கள் தனது உயிரைக்கொடுத்தாவது பாதுகாக்கும். மும்பையில் இளம்பெண் ஒருவரை தெருநாய் ஒன்று கொடூரனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறது. மும்பை வசாய் பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு 32 வயது பெண் ஒருவர் வேலைக்கு சென்றுவிட்டு கடைசி புறநகர் ரயிலில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் இருட்டான பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் 7 அடி உயரமான ஒருவர் பின் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அப்பெண் முன்பு வந்த அந்த `நபர் நான் உன்னை பாலியல் வன்கொடுமை செய்யப்போகிறேன்’ என்று தெரிவித்தார். அதோடு வாயை பொத்தி கீழே தள்ளி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். உடனே அந்நேரம் தெரு நாய் ஒன்று அந்த நபரைப்பார்த்து குரைத்தது. அதோடு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கடிக்க பாய்ந்தது. இதனால் அந்த நபரின் பிடி தளர்ந்தது.
உடனே அப்பெண் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை எட்டி உதைத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அவர் தனது ஐபோனை விட்டுவிட்டுச்சென்றார். அப்பெண் தப்பித்து ஓடிச்சென்று போலீஸில் புகார் செய்தார். இது குறித்து அப்பெண் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ”நான் இருட்டில் நடந்து சென்ற போது 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னை பின் தொடர்ந்து வந்தார். திடீரென என் முன்பு வந்து உன்னை பாலியல் வன்கொடுமை செய்யப்போகிறேன் என்று தெரிவித்தார். நான் கத்தக்கூடாது என்பதற்காக எனது வாயை பொத்தி என்னை கீழே தள்ளினார். அந்த நேரம் அங்கு வந்த தெருநாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பார்த்து கடுமையாக குரைத்தது. உடனே அந்த நபர் பயத்தில் தனது பிடியை தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த நபரை எட்டி உதைத்துவிட்டு எழுந்து தப்பிக்க முயன்றேன். உடனே எனது ஐபோனை பிடுங்கிக்கொண்டு என்னை மீண்டும் கீழே இழுத்துப்போட முயன்றான்.
நான் அங்கிருந்து ஓடி தப்பித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரை தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் அப்பெண்ணை விரட்டி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் பெயர் சந்தீப் என்று தெரிய வந்தது. குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்திருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் பாட்டீல் தெரிவித்தார். அந்த நபர் காந்திவலி, தகிசர் போன்ற பகுதியில் போலீஸாக நடித்து மோசடி செய்தவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. சந்தீப் அப்பெண்ணிடம் பிடுங்கிய ஐபோனை சாக்கடையில் வீசி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத்தில்தான் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்திருந்தார். தெருநாய்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வோரை பார்த்து குரைத்து தொல்லை செய்வதை சிலர் சிரமமாக கருதினர். ஆனால் மும்பையில் தெரு நாய் ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறது.