புதுடெல்லி: நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பெயர் அமன் சிங் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் கைது செய்துள்ளனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹஸாரிபாக் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் முதல்வர் இஷான் உல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் அலாம் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் இஷான் உல் ஹக் அந்த நகரின் நீட் – யுஜி 2024 தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர். அதே போல இது தொடர்பாக பிஹாரின் பாட்னாவில் மனீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இவர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கி அவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மனீஷ் மாணவர்களை தனது காரில் அழைத்து சென்றுள்ளார். அசுதோஷ் மாணவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் தந்துள்ளார்.
‘இளநிலை நீட் நுழைவுத் தேர்வு – 2024’ முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பிஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் நீட் முறைகேடு தொடர்புடைய நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் அழுத்தமும் இதில் உள்ளது. என்டிஏ-வை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வரும் 8-ம் தேதி அன்று நீட் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என தெரிகிறது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. கடந்த மாதம் கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.