தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. சமீபத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யப்படாமல் இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாயி ராமர் நம்மிடம் பேசுகையில், “வாசுதேவநல்லூர் பகுதியில அதிகளவுல விவசாயம் நடக்குது. வாசுதேவநல்லூர் பகுதியை சுற்றிலும் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவுல பயிரிடப்பட்டிருந்த நெல் அறுவடை செய்யப்பட்டு வருது. அறுவடை செஞ்ச நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்றால் அதிகாரிகள் வாங்க மறுக்கிறாங்க. இது எங்களுக்கு மனவேதனையா இருக்கு. இதனால, விவசாயிகள் வெளி மார்க்கெட்டுல உள்ள வியாபாரிகளுக்கு விக்க வாசுதேவநல்லூர் உள்ள நான்கு ரத வீதிகள்ல நெல்லை கொட்டி வெச்சிருக்கோம்.
மூட்டை கணக்குல நான்கு ரத வீதிகள்ல நெல்லை கொட்டி வெச்சு குடும்பத்தோடு காவல் காத்துக்கிட்டு கிடக்கிறோம். அரசு நெல் கொள்முதல் நிலையம் எங்களை கைவிட்டதால, இப்பகுதி விவசாயிகள் எல்லாருமே தனியார் வியாபாரிகளை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கு. இதை நல்லா தெரிஞ்சுகிட்ட வியாபாரிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் நியாயமான விலையைகூட கொடுக்காமல் குறைஞ்ச விலையில நெல்லை கொள்முதல் செய்யும் நிலை ஏற்பட்டுருக்கு.
மழை வந்தாலோ, சூறைக்காற்று வீசினாலோ நெல்லை பாதுகாக்குறதுக்கு படாதபாடு பட வேண்டியிருக்கு. இந்நிலையில, நெல்லுக்கு அரசு நிர்ணயிச்சருக்க குறைந்தபட்ச ஆதாரவிலைக்கூட எங்களுக்கு கிடைக்காதது வேதனை தருது. இதனால எங்க உழைப்பெல்லாம் வீணாகுது” என்றார் வருத்தத்தோடு.
சமூக ஆர்வலர் சுரேஷிடம் பேசியபோது, “நெல்லை பாதுகாக்க, அரசு கூடுதல் கொள்முதல் நிலையங்களை வாசுதேவநல்லூர் பகுதியில் திறக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றுக்கெல்லாம் இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே, வாசுதேவநல்லூர் பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தகுந்த ஆதாரங்களுடன் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்திருக்கிறோம். அதிகாரிகள் நிச்சயம் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.
தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கனகம்மாளிடம் பேசுகையில், “வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரத்தில் சிவகிரி, தென்மலை, திருமலாபுரம் ஆகிய மூன்று இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. தற்போது அங்கு நெல் கொள்முதலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். எவ்வளவு ஈரப்பதம் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்து அரிசியாக தயார் செய்ய அனுப்ப முடியும். இப்படி அனுப்பப்படும் அரிசிதான் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்தால், அந்த மூட்டைகள் விரைவில் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகி கெட்டு போய்விடுகிறது. எனவே, ஈரப்பதம் அதிகம் உள்ள நெல் மூட்டைகளை வாங்குவது மட்டும்தான் தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, விவசாயிகள் சொல்வது போன்று நெல் கொள்முதல் செய்யக்கூடாது என்ற எண்ணம் கிடையாது. அவர்களின் குற்றச்சாட்டு தவறானது” என்றார்.