யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.