Doctor Vikatan: தூக்கத்திலிருந்து விழிக்கும்போது நினைவில்லாத நிலை… ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு வயது 85. நான் எப்போதும் சுறுறுப்பாகவே இருப்பேன்.  மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கும் வழக்கம் உள்ளது. 30 நிமிட தூக்கத்துக்குப் பிறகு எழுந்திருக்கும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் எழுந்ததும் அந்த இடத்தையும் என் படுக்கையையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
-சேது ஷண்முகம், கனடா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என பிரபல பழமொழியே இருக்கிறது. அதற்கு ‘ஃபுட் கோமா’ (food coma)  என்றே பெயர். அதாவது வயிறு நிறைய சாப்பிட்டதும் தூக்க உணர்வு ஏற்படுவது மிகவும் சகஜம்.

நம் உடலானது செரிமான வேலைகளைச் செய்யும்போது, மூளையிலுள்ள ஹார்மோன்கள் எல்லாம் சற்று மந்தமாகத் தொடங்கும். அதாவது உடலை அலெர்ட் செய்யும் ஹார்மோன்கள் மந்தமாகின்றன. அதன் விளைவாக தூக்கம் வரும். தூங்கும்போது நம் மூளையின் செயல்திறன் குறைவதால், cognitive function என்று சொல்லப்படுகிற அறிவாற்றல் திறனும் சற்று குறையும். அதாவது நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் போகலாம்.

குறட்டை

தூக்கத்தில் இருந்து கண் விழித்தபிறகு நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது சிறிது நேரத்துக்குத் தெரியாமலிருப்பதை ஸ்லீப் இனர்ஷியா  ( Sleep inertia ) என்கிறோம், அந்த உணர்வானது 30 நிமிடங்களுக்கு இருப்பது நார்மலானதுதான். எனவே, இதை அசாதாரணமானதாக நினைத்து பயப்படத் தேவையில்லை. தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா என்று கவனிக்க வேண்டும். குறட்டை விடும்போது மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் போகாமல், கார்பன் டை ஆக்ஸைடு சேர்கிறது என்றால் அந்த நிலையை சாதாரணமாக அணுகக்கூடாது.

அது சற்றே சீரியஸான பிரச்னைதான். தூக்க சிகிச்சை மருத்துவரை அணுகினால், ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) என்ற பரிசோதனையைச் செய்து, மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் செல்கிறதா என்று உறுதிசெய்வார். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு முறையான சிகிச்சை தேவைப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.