உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இன்றுதான் கோப்பையோடு நாடு திரும்பியிருந்தது. காலையில் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி, மாலையில் மும்பையின் கோப்பையுடன் பேரணியாகச் சென்று வான்கடே மைதானத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியினர் ரொம்பவே நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.
பயிற்சியாளர் டிராவிட் பேசுகையில், “இந்த இந்திய அணி என்னுடைய குடும்பத்தைப் போன்றது. கடின உழைப்பிற்கும் போராட்டக் குணத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த அணிக்குப் பயிற்சியளித்ததில் பெருமை கொள்கிறேன்.
நாங்கள் தரையிறங்கிய தருணத்திலிருந்து இவர்கள் கொட்டும் அன்பிற்கு அளவே இல்லை. இதையெல்லாம் நான் நிச்சயமாகத் தவறவிடுவேன்.
ஓடிஐ உலகக்கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் தோற்றவுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக நினைத்தேன். அப்போதுதான் ரோஹித் அழைத்தார். இன்னும் 6 மாதங்களில் இன்னொரு உலகக்கோப்பை இருக்கிறது, அதை வெல்வோம் என்றார். இப்போது நாங்கள் இணைந்து வென்றுவிட்டோம். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு வந்த ஆகச்சிறந்த அலைபேசி அழைப்பு அதுதான்” என்றார்.
விராட் கோலி பேசுகையில், “எல்லாருக்கும் மிக்க நன்றி. இன்று நீங்கள் பொழிந்த அன்பை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் எங்களைச் சரிவிலிருந்து மீண்டும் மீண்டும் மீட்ட பும்ராவுக்கு நீங்கள் கரகோஷங்களைக் கொடுக்க வேண்டும். பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர். 2011-இல் உலகக்கோப்பையை வென்றபோது எனக்கு 22 வயதுதான் இருக்கும். அப்போது சீனியர் வீரர்களின் அழுகையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ரோஹித்துடன் 15 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவருகிறேன். அவர் அவ்வளவு உணர்ச்சிகளை வெளிக்காட்டி நான் பார்த்ததே இல்லை. இறுதிப்போட்டியை வென்றவுடன் அவரும் அழுதார். நானும் அழுதேன். இருவரும் கட்டியணைத்துக் கொண்டோம். அந்த நாளை மறக்கவே முடியாது” என்றார்
உலகக்கோப்பையின் தொடர் நாயகன் பும்ரா பேசுகையில், “வான்கடே மைதானம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டிலிருந்து இங்கே ஆடி வருகிறேன். இன்று ரசிகர்கள் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்துவிட்டார்கள். போட்டிகளை வென்ற பிறகு நான் வழக்கமாக அழமாட்டேன். ஆனால், என் மகனுக்கு முன்பாக உலகக்கோப்பையை வென்றது உணர்வுபூர்வமானதாக இருந்தது. அதனால்தான் இரண்டு மூன்று முறை அன்று அழுதுவிட்டேன்” என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், “இது ஒட்டுமொத்த தேசத்துக்குமான வெற்றிக் கோப்பை! இது ஒரு ஸ்பெஷலான அணி. இப்படி ஒரு அணி கிடைக்கப்பெற்றதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என்றார்.