கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹெச். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். முகமது ஹெச், மகள் வீட்டில் தனியாக இருக்கும்போதும், மனைவி தூங்கிய பிறகும் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அது ஒருகட்டத்தில் பாலியல் வன்கொடுமையாக மாறியிருக்கிறது. 10 வயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு, அதாவது சிறுமிக்கு 16 வயது ஆகும் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்றுவலியும், வாந்தி, மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
உடனே மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்ததில் சிறுமி மூன்றுமாதக் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, முகமது ஹெச், மகளிடம் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியிருக்கிறார். ஆனால், சிறுமி கருவுற்றிருந்த விவகாரம் மருத்துவமனை மூலம் வெளிச்சத்துக்கு வந்ததும், காவல்துறை சிறுமியிடம் விசாரணை நடத்தியது. அப்போதுதான் கடந்த ஆறு வருடங்களாக சிறுமி அனுபவித்து வந்த கொடுமைகள் உலகுக்கு தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு பதிவு செய்த காவல்துறை, சிறுமியின் கருவை கலைத்து, சிறுமியின் தந்தையை கைது செய்தது.
இந்த வழக்கு கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முகமது ஹெச் தரப்பில்,“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில்தான் தங்கி கல்வி பயின்று வந்தார். அங்கிருந்து வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோதான் வீட்டுக்கு வந்து செல்வார். அவ்வாறு சிறுமி வீட்டுக்கு வந்திருக்கும்போது, சிறுமிக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டது. இதனால்தான் சிறுமியின் தந்தை, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி கருவுற்றிருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் அப்போது விசாரித்ததில் தனது தாத்தாவால், தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுதவிரவும், சிறுமி ஒருமுறை திடீரென ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக அப்போதே சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய தேதியும், சிறுமி கர்ப்பமான தேதியும் ஒத்துப் போகிறது.” என வாதிடப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில், “எனது மகளின் கர்ப்பத்துக்கு, அவளின் தந்தையும், தாத்தாவுமே பொறுப்பு” எனத் தெரிவித்திருந்தார். மேலும், குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்களும் முகம்மது ஹெச்-க்கு எதிராகவே சாட்சியம் அளித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் வாக்குமூலம் அளித்தார். அப்போது, வீட்டில் தொடர்ந்து தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தலால் தான், அச்சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், தனக்கு அந்த சிறுவனுடன் காதல் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளும் சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவின் டிஎன்ஏ மாதிரிகளின் அடிப்படையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு, அவரது தந்தையான முகம்மது ஹெச் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்பிறகே மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரெஸ்மி எஸ்.ம்,“இது போன்ற சூழ்நிலைகளில், அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை இறுதி முடிவாக கருதி, தீர்ப்பளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் Aparna Ajinkya Firodia v. Ajinkya Arun Firodia (2023 KHC 6155) என்ற வழக்கில் கூறிப்பட்டிருக்கிறது.
மேலும், இதர சாட்சிகளும் முகம்மது ஹெச்-க்கு எதிராகவே இருக்கிறது. சிறுமியின் தந்தைதான் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்பதை ஒட்டு மொத்த சாட்சியங்களும் நிரூபிக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் தந்தையாக இருந்தும், குழந்தைக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பைத் தரத் தவறியதுடன், தந்தை என்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A(2), 354A(1)(i), 376AB, 376(3), 376(2)(n), 376(2)(f), 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழும், போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள் 10 r/w 9 (m), 10 9 (n), 6 r/w 5(m), 5(l), 5(n) and 5(j)(ii) ஆகிய பிரிவுகளின் கீழும், சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 75-இன் கீழும் குற்றச்சாட்டுகள் நீருபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, 43 வயதான குற்றவாளி முகம்மது ஹெச், தனது மகளை சிறுவயது முதல் 16 வயது வரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை வழக்கமான பாலியல் குற்றங்களுடன் ஒப்பிட முடியாது. இந்த சம்பவங்கள் சிறுமியின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனரீதியான பாதிப்பையும் உண்டாக்கும். குற்றவாளி கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், அவர் கருணைக்கு தகுதியானவர் அல்ல. பெற்றோர், தனது பாதுகாவலர் என நம்பும் பெண் குழந்தையின் மீது தந்தையின் இதுபோன்ற செயல்கள், அந்த குழந்தையின் முழு எதிர்கால வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய குற்றங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, இத்தகைய குற்றங்கள் கடும் தண்டனைக்குத் தகுதியானவை. ஆதலால், முகம்மது ஹெச் செய்த குற்றங்களுக்கு மொத்தம் 101 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அது முடிந்த பின் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையும் நடைமுறைக்கு வரும்” என தீர்ப்பளித்திருக்கிறார்.