அதற்காக ரோகித் சர்மாவுக்கு நன்றி – ராகுல் டிராவிட் பேட்டி

மும்பை,

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பேசினார்கள். அதேபோல தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெறும் ராகுல் டிராவிட்டும் பேசினார். அப்போது கடந்த ஒருநாள் உலகக் கோப்பையுடன் பயிற்சியாளராக ஓய்வு பெறவிருந்த தம்மை டி20 உலகக்கோப்பை வரை பணிபுரிய சொன்னதற்காக ரோகித் சர்மாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதுவே தற்போது தமக்கு உலகக்கோப்பை வெற்றியை கொடுத்ததாக தெரிவித்த டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

“50 ஓவர் உலகக்கோப்பை முடிந்ததும் இந்த பணியில் தொடர்வேனா என்பது உறுதியாக இல்லாமல் இருந்தேன். அந்தத் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். அப்போது ரோகித் சர்மா என்னை தொடர்பு கொண்டு ‘ராகுல் பாய் இன்னும் ஒரு முறை முயற்சி செய்வோம். இப்போது ஒன்றாக முயற்சிப்பது நன்றாக இருக்கும்’ என்றார். எனவே அதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன்.

ஏனெனில் அதனாலேயே இந்த சிறப்பான வீரர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. அத்துடன் பார்படாஸ் நகரிலும் இங்கேயும் நான் அனுபவித்த அனுபவம் கிடைத்தது. எனவே உண்மையில் என் வாழ்நாளில் வந்த அந்த அற்புதமான மொபைல் அழைப்புக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். தற்போது இந்த அன்பை நான் தவற விட போகிறேன். இந்தியாவுக்கு வந்தது முதல் ரசிகர்கள் மற்றும் மக்களின் அன்பை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரசிகர்களாலேயே இது உலகின் அற்புதமான விளையாட்டாக இருக்கிறது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.