மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.
வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டிலிருந்து சரியான நேரத்தில் இருவரும் ஓய்வு பெற்று இருப்பதாக இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
மேலும் இரு வீரர்களையும் கவுரவிக்கும் விதமாக இனி எந்த ஒரு வீரருக்கும் விராட் மற்றும் ரோகித் அணிந்திருந்த நம்பர் 18 மற்றும் நம்பர் 45 ஜெர்சியை வழங்க கூடாது என்று பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரண்டு ஜெர்சிக்கும் பிசிசிஐ ஓய்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவும் பிடித்த கேச்சை என் வாழ்நாளில் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.