சென்னை: “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்.
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? – பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.