“இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” – ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: “உங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்துங்கள், இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” என்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 செல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ள இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடினார். அப்போது அவர், “நீங்கள் ஒலிம்பிக் சென்று வெற்றிபெறும் மனநிலையில் உள்ளீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன். விளையாட்டு உலகத்துடன் தொடர்புடைய நம் நாட்டின் நட்சத்திரங்களைச் சந்திக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்.

நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். விளையாட்டில் உங்களின் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்தவே செல்கிறீர்கள். ஒலிம்பிக் கற்பதற்கான மிகப் பெரிய களம். கற்கும் மனப்பான்மையுடன் பணிபுரிபவருக்கு கற்க வாய்ப்புகள் ஏராளம். குறை சொல்லி வாழ விரும்புபவர்களுக்கு வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.



நீங்கள் ஒலிம்பிக் செல்லும்போது பல சிரமங்களையும் அசவுகரியங்களையும் எதிர்கொள்ள நேரலாம். ஆனாலும், வீரர்களின் இதயங்களில் நமது நாடும் அதன் மூவர்ணக் கொடியுமே இருக்கும். இந்த முறையும் நீங்கள் விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த முறையும் நாங்கள் வீரர்களின் வசதிக்காக புதிதாக ஏதாவது செய்ய முயற்சித்தோம். பிரான்சில் உள்ள இந்திய மக்கள், நமது வீரர்களுக்காக செயல்பட முயன்றுள்ளோம். அவர்கள் நமது வீரர்களுடன் இன்னும் அதிக தொடர்பில் இருப்பார்கள். என் தரப்பில் இருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் நிகழ்ச்சி நடக்கும்போது நீங்களும் அங்கே இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒலிம்பிக்ஸ்-க்காக பாரிஸ் செல்லும் நமது குழுவினருடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள் தங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணங்களும் வெற்றிகளும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 26-ல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். இதில், பல விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.