இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடரை பார்ப்பது எப்படி? – ஹாட்ஸ்டாரும் இல்லை, ஜியோ சினிமாவும் இல்லை

IND vs ZIM Live Telecast Streaming Indian Timing Details: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்துவிட்டது. இனி அடுத்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு முக்கிய ஐசிசி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்பதால் அனைத்து அணிகளும் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில்தான் அதிகம் கவனம் செலுத்தும் எனலாம். 

வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணியும் தனது ஒருநாள் அணியை வலுவாக்கும் முயற்சியில் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் வரை இந்திய அணி வரிசையாக டெஸ்ட், ஓடிஐ, டி20 தொடர்களில் விளையாட உள்ளது. 

அடுத்தடுத்து சுற்றுப்பயணம்

நடப்பு ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டுக்கு டி20 தொடரில் (IND vs ZIM) விளையாட இந்தியா (Team India) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதை தொடர்ந்து, ஜூலை இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தொடர்ந்து இந்தியாவுக்கு செப்டம்பரில் வங்கதேச அணியும், அக்டோபரில் நியூசிலாந்து அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. அடுத்து நவம்பரில் தென்னாபிரிக்காவுக்கு டி20 தொடரில் விளையாடவும், டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை விளையாடவும் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்

இப்படி வரிசைக்கட்டி தொடர்கள் இருக்கும் வேளையில், டி20 உலகக் கோப்பை முடிந்த உடன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுகிறது. ஜிம்பாப்வே அணி நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெறவில்லை. அதை தொடர்ந்து இந்திய இளம் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

ஜூலை 6ஆம் தேதி (நாளை) இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. ஜூலை 7ஆம் தேதி 2ஆவது டி20 போட்டியும், ஜூலை 10ஆம் தேதி 3ஆவது டி20 போட்டியும், ஜூலை 12ஆம் தேதி 4ஆவது டி20 போட்டியும், ஜூலை 14ஆம் தேதி 5ஆவது டி20 போட்டியும் நடைபெற உள்ளது. இந்த அனைத்து டி20 போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் உள்ள ஹாராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

அந்த 3 வீரர்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த தொடருக்கு இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் புதிய வீரர்கள் அடங்கிய இந்திய டி20 அணியைதான் இனி நாம் பார்க்கப் போகிறோம். இந்த தொடரில் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், தூபே ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இருப்பினும், தற்போது அவர்கள் இந்தியா திரும்பியிருப்பதால் முதலிரண்டு போட்டிகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டு மீதம் உள்ள மூன்று போட்டிகளில் விளையாட உள்ளனர். அந்த வகையில் முதலிரண்டு போட்டிகளுக்கு துருவ் ஜூரேல், சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எங்கு, எப்போது பார்ப்பது?

மேலும், இந்த தொடரில் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய சீனியர்களான ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரியான் பராக், அபிஷேக் சர்மா், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் இந்த போட்டியை இந்தியாவில் நேரலையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் இந்தியா – ஜிம்பாப்வே டி20 தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம். ஓடிடி தளம் என்றால் சோனிலிவ் செயலியில் சந்தா செலுத்தி பார்க்க வேண்டும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். 

மேலும் படிக்க | IND vs ZIM: ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் நீக்கம்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.