லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்தபோலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில்பணியாற்றியுள்ளார். அப்போது,1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம்பக்தர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
பாபாவான பிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்புபெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன்மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்களை நம்பவைத்துள்ளார். பிறகு இந்தப் பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சில வருடங்கள் ஆக்ரா பகுதியில் இவர் கூட்டங்களை நடத்தவில்லை.
அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக பாபா கூறுவதுண்டு. இவரது பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கடந்த வருடம் ஜனவரி 3-ல் வந்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்த அகிலேஷ், “போலே பாபா சர்வதேசசமூகத்தாலும் பாராட்டத் தகுதியானவர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்குமுன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோதும் பாபாவின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்துள்ளது. அவரது ஆட்சிக்காலங்களில் பாபா சிவப்பு விளக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வந்துள்ளார். பாபாவும் மாயாவதியின் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.