கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மின்சார நெருக்கடியைத் தீர்க்க இது பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியில் உள்ள சில தரப்பினர் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த,

கடந்தகால நெருக்கடி நிலையின் போது வலுசக்தித் துறை தொடர்பான பல திட்டங்கள் முடங்கின. ஆனால் தற்போது இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனவே, வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் இடைநடுவில் நிறுத்தப்பட்ட குறித்த திட்டங்களை, மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான சட்ட ரீதியிலான நிலைமைகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றி, நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைத் தீர்க்க பெரும் உதவியாக இருக்கும் என்பதைக் கூற வேண்டும்.

மேலும், மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகியவை கூரையின் மீது பொருத்தப்படும் சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் மின்சார உற்பத்திக்கான செலவு குறித்து பொருத்தமான கணக்கீடுகளை செய்துள்ளன. அதன்படி, கட்டணங்களை குறைக்க முடிந்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க முடிந்தது. இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மின்சார சபை நட்டமின்றி செயற்படும் நிலையை ஏற்படுத்த முடிந்துள்ளது.

மேலும், அதானி திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் சுற்றாடல் அறிக்கைகள் போன்று அது தொடர்பான மேலதிக பணிகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. அவ்விடயங்கள் நிறைவடைந்த பின்னர், தற்போதுள்ள விலைகளின் பிரகாரம் செயற்பட முடியுமா என்பது குறித்து கலந்துரையாட உள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் சில தரப்பினர் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரிகின்றது. உமா ஓயா, சாம்பூர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் போதும் இவ்வாறான பொய்யான கருத்துகளை அவர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.