கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் 2024.07.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதன்போது, ஜனாதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பாராளுமன்ற முறைமை தொடர்பில் புரிந்துகொள்வதற்கான இளையோரின் பங்கேற்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மேலும், அரசியல் களத்தில் பிரவேசிக்கும் போது அரசியலில் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எதிர்கால சந்ததியினர் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தார். மாணவர் பாராளுமன்ற வெளித்தொடர்பு நடவடிக்கைகளில் ஒன்லைன் ஊடாக தொடர்புகொண்ட முதலாவது பாடசாலை கேகலு வித்தியாலயம் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். அத்துடன், அனைத்து இளம் மாணவர்களும் பாராளுமன்ற முறைமை பற்றி கல்வியைப் பெருமாறும், அரசியல் அறிவுள்ள சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அழைப்பு விடுத்தார்.
தற்போதைய ஜனாதிபதி செயலகமான, இலங்கை வரலாற்றில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள நிழல் கொடுத்த சட்டவாக்கக் கட்டடத்தில் இந்த விவாதத்தை நடத்த முடிந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாகும் என கேகலு வித்தியாலயத்தின் பிரதி அதிபர் டபிள்யு.ஏ. ஹேரத் இதன்போது தெரிவித்தார்.
கேகாலை, கேகலு வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொள்ள, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு முகாமையாளர் புத்தினி ராமநாயக்க, பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, யஸ்ரி மொஹமட் மற்றும் பொதுமக்கள் வெளித்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.