கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகமுள்ள இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகளின் விதிமீறல் தொடர்கிறது.
குறிப்பாக, மாநகரில் நிலவும் நெரிசலுக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பிரதான காரணமாக உள்ளன. இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘சமீபத்தில் உக்கடத்தில் பள்ளி ஆசிரியை டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். மாநகர காவல்துறையின் புள்ளிவிவரப்படி, நடப்பாண்டில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டஉயிரிழப்பு அல்லாத விபத்துகள் பதிவாகியுள்ளன. 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லாரிகள், டிப்பர் லாரிகள், அதிக சக்கரங்களைக் கொண்ட சரக்கு லாரிகள், சரக்கு வேன்கள் உள்ளிட்டவை விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த வாகனங்கள் நகரில் நுழைய நேரக்கட்டுப்பாடு இருந்தாலும், சில இடங்களில் அதை மீறி நுழைந்து விடுகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வது தொடர்கிறது.
குறிப்பாக, டிப்பர் லாரிகள் விபத்தை ஏற்படுத்துவதை போல, புழுதியை கிளப்பிக் கொண்டு அதிவேகமாக செல்கின்றன. கேஸ் சிலிண்டர், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் உரிய நேரத்தின் போது மட்டுமே நகரில் அனுமதிக்க வேண்டும். இவ்வகை லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் சர்வ சாதாரணமாக செல்கின்றன. லாரிகளை பார்த்தாலே பொதுமக்கள் பயந்து ஒதுங்கும் சூழல் உள்ளது’’ என்றனர்.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, “கோவையில் லாரிகள் நுழையும் நேரக்கட்டுப்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இருந்த போக்குவரத்துக்கும், தற்போதுள்ள போக்குவரத்துக்கும் வேறுபாடு உள்ளது. காலை 7 மணி முதலே மக்கள் நடமாட்டம், பள்ளி வாகனங்களின் நடமாட்டம் தொடங்கி விடுகிறது.
எனவே, கனரக வாகனங்கள் நகரில் நுழையும் நேரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரில் நுழைய விதிக்கப்பட்ட தடை நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி, ஆர்.ஜி. வீதி, பூமார்க்கெட், ரேஸ்கோர்ஸ், டவுன்ஹால் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் காலை முதல் இரவு வரை லாரிகள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
இரவு 10 மணிக்கு பின்னர், அதிகாலை 6 மணி வரை அனுமதிக்கலாம். நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், மொத்த விற்பனையகங்களின் குடோன்களை எல்லையோர பகுதிகளுக்கு மாற்ற அறிவுறுத்தலாம். இதனால் அங்கு லாரிகள் வருவது தவிர்க்கப்படும்’’என்றார்.
மாநகர போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது,‘‘நகரில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நுழைபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் முறை ரூ.ஆயிரம், அடுத்த முறை ரூ.2 ஆயிரம் என அபராதம் விதிக்கப்படும்.
அதோடு மற்ற விதிமீறல்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படுகிறது. நகருக்குள் அனுமதிக்கப்பட்ட நேரங் களில் மட்டுமே வர வேண்டும். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். காஸ் சிலிண்டர் லாரிகள், ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. மற்ற லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.