சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (43). இவர், பைக் கால் டாக்ஸி டிரைவராக இருந்து வருகிறார். கடந்த 21.6.2024-ம் தேதி இரவு சென்ட்ரலுக்கு ஒரு கஸ்டமரை டிராப் செய்ய குமரவேல் பைக்கில் சென்றார். பின்னர் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது குமரவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியின் பின்புறத்தில் பைக்கை நிறுத்திய குமரவேல் அங்கேயே ஓய்வெடுத்தார். அப்போது அவர், தூங்கிவிட்டார். இரவு 12 மணியளவில் போலீஸ் சீருடையில் வந்த ஒருவர், குமரவேலை தட்டி எழுப்பி இங்கேல்லாம் படுக்கக் கூடாது என்று எச்சரித்தார். அதன் பிறகு குமரவேலை பார்த்து உன் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது நீ என்ன வேலை செய்கிறாய் என்று அந்த போலீஸ்காரர் கேட்க, நான் பைக் டாக்ஸி டிரைவராக உள்ளேன் என்று பதிலளித்தார் குமரவேல்.
உடனே டிரைவிங் லைசென்ஸ் எடு என மிரட்டும் தொனியில் போலீஸ்காரர் கேட்க, குமரவேலும் தன்னுடைய பர்ஸிலிருந்து டிரைவிங் லைசென்ஸை எடுத்திருக்கிறார். அப்போது அந்தப் பர்ஸை பறித்துக் கொண்ட போலீஸ்காரர், ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக் கொள் என்று வேகமாக இருட்டில் நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த குமரவேல், அய்யா, பர்ஸை கொடுங்க என்று பரிதாபமாக கேட்க, பர்ஸிலிருந்த ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, 500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட போலீஸ்காரர், காலி பர்ஸை அங்கேயே வீசிவிட்டு வேகமாக நடந்து சென்றார்.
அதைப்பார்த்த குமரவேல், காலி பர்ஸை எடுத்துக் கொண்டு அந்த போலீஸ்காரரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அதற்குள் அந்த போலீஸ்காரர் இருட்டில் மாயமாக மறைந்து விட்டார். உடனே அருகில் உள்ள மெரினா காவல் நிலையத்துக்கு சென்ற குமரவேல், அங்கிருந்து காவலர்களிடம் விவரத்தைக் கூறினார். அதைக்கேட்ட காவலர்கள், லைட் ஹவுஸ் பகுதிக்கு இரவு ரோந்து பணிக்கு எந்தக் காவலரும் செல்லவில்லையே என்று கூறியதோடு காவல் நிலையத்திலிருந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் சீருடையில் ஒருவர் வேகமாக நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார் என்று மெரினா போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர்.
இந்தச் சமயத்தில் குமரவேலின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 8,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் அதோடு 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருப்பதாகவும் மெசேஜ் வந்தது. அதைப்பார்த்த குமரவேல், இந்தத் தகவலை மெரினா காவல் நிலையத்தில் தெரிவித்தார். உன்னுடைய ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு ஆகியவற்றின் ரகசிய நம்பர் எப்படி தெரியும் என குமரவேலிடம் போலீஸார் விசாரித்தனர். அதற்கு அவர், நான்தான் கார்டுகளின் பின்னால் நம்பரை எழுதி வைத்திருந்தேன் என்று கூறினார். இதையடுத்து பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கும் பெட்ரோல் பங்குக்கும் சென்ற போலீஸார், அதைப் பயன்படுத்தியவர் குறித்து விசாரித்தனர். அங்குள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்த போது அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து அடுத்த சி.சி.டி.வி-க்களை மெரினா போலீஸார் ஆய்வு செய்தபோது அந்த நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்வதை உறுதிப்படுத்தினர். அதனால் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மெரினா போலீஸார், தகவல் தெரிவித்து போலி போலீஸ்காரரைத் தேடிவந்தனர்.
இந்தநிலையில் குமரவேலிடம் பணத்தைப் பறித்து சென்றவர் ஏற்காடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்குச் சென்ற போலீஸார் அந்த போலி போலீஸ்காரைப் பிடித்து விசாரித்தனர் .விசாரணையில் அவரின் பெயர் விக்னேஷ் (26), திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என தெரிந்தது. இதையடுத்து விக்னேஷை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் உள்ளன. தமிழக காவல்துறையின் சீருடையை வாங்கிய விக்னேஷ், அதன்மூலம் பலரை மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறார். விசாரணைக்குப் பிறகு விக்னேஷை போலீஸார் கைது செய்தனர்.