பங்குச் சந்தை முதலீடு என்றாலே என்று பலரும் நினைத்து ஒதுங்கியது ஒரு காலம்; இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து டீமேட் கணக்கைத் தொடங்கி வருகின்றனர்.
பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கவேண்டும், விற்க வேண்டும் எனில், டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். இந்த டீமேட் கணக்கு ஆரம்பிப்பது கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியா முழுக்க 42.4 லட்சம் பேர் புதிதாக டீ மேட் கணக்கு ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், ஜூன் மாதத்தில் மட்டும் மிக அதிகமாக டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!
கடந்த ஏப்ரல் மாதத்தில் 30.5 லட்சம் டீமேட் கணக்குகளும், மே மாதத்தில் 35.5 லட்சம் டீமேட் கணக்குகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த டிசம்பர் மாதத்தில் மிக அதிகபட்சமாக 47 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிய இந்தக் கணக்குகளின் எண்ணிக்கை, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த 14 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 25 லட்சம் டீமேட் கணக்குகளுக்கு மேல் தொடங்கப்படும் நிலையில், நம் நாட்டில் தொடங்கப்பட்டுள்ள சி.டி.எஸ்.எல் மற்றும் என்.எஸ்.டி.எல் (CDSL & NSDL) மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்துள்ளது!
பங்குச் சந்தை கடந்த சில ஆண்டுகளில் அமோகமான வளர்ச்சி அடைந்து வருவதே புதிதாகப் பலரும் டீமேட் கணக்கு தொடங்குவதற்கான காரணம் ஆகும். பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான சென்செக்ஸ் சில தினங்களுக்குமுன் 80000 புள்ளிகளைத் தொட்டது. இனிவரும் நாட்களில் பங்குச் சந்தை புள்ளிகள் இன்னும் உயரும்; அதனால் அதிக லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் பலரும் டீமேட் கணக்கு தொடங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தயாராகி வருகிறார்கள்!