“பதவியேற்பில் அரசியலைமைப்புச் சட்டத்தைப் பின்பற்றாத தமிழக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை” – எல்.முருகன் தகவல்

கோவை: “அரசியலைமைப்புச் சட்டத்தை கடைபிடித்து பதவியேற்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 5) மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதியம் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பதவியேற்பின்போது, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகையில்தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். இதை கடைபிடிக்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மக்களவை சபாநாயகர் குழு ஒன்றை அமைத்துள்ளார். இக்குழுவின் விசாரணையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஹாத்ரஸ் மாவட்டத்துக்குச் சென்றுள்ளார். ஆனால், கள்ளச் சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட கள்ளக்குறிச்சிக்கு அவர் ஏன் வரவில்லை?
கள்ளக்குறிச்சி மக்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஸ்டாலினுக்கு வழி தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்து இரட்டை நிலைப்பாடு எடுக்கக்கூடாது. கள்ளக்குறிச்சிக்கு ராகுல் காந்தி வரவேண்டும்.



தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று மிகப்பெரிய உத்வேகத்தோடு களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நிதி வழங்கியது குறித்து இரு தரப்பு விவாதங்கள் உள்ளன. கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.

கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழித்து, தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான யோகா, கல்வி உள்ளிட்ட நல்ல கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டும். பாஜக தலைவர்களின் செயல்பாடுகளால், பாஜக மிகப் பெரும் வகையில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதற்கு, எங்கள் கட்சியின் மாநில தலைவர் பதிலளித்துள்ளார்.

புதிய சட்டங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது தேர்தல் வாக்குறுதியாக பழநியில் இருந்து தாராபுரம் வழியாக ஈரோட்டுக்கு ரயில் பாதை கொண்டு வரப்படும் என்று கூறினேன். உடனடியாக அடுத்த பட்ஜெட்டில் அதனை அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாட்டுக்காக ரூ.50 கோடிக்கும் மேலாக செலவு செய்து மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்வதற்கு, வியாபாரிகள், மாணவர்கள் வருவதற்கு, ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நாம் தேர்தல் வாக்குறுதியாக வழங்கினோம். அதனை நேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையாகக் கொடுத்துள்ளோம். உடனடியாக ஆய்வு செய்து இரட்டைப் பாதை அமைக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.