புதுடெல்லி: 2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் ரூ.1,26,887 கோடியாக உயர்ந்து, முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பைவிட 16.8% அதிகரித்திருக்கிறது. இதனை தெரிவித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த சாதனையில் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுகள். நமது திறன்களை மேலும் மேம்படுத்தவும், இந்தியாவை முன்னணி சர்வதேச பாதுகாப்பு உற்பத்தி மையமாக நிலைநிறுத்தவும் ஆதரவான சூழலை உருவாக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். இது நமது பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி, நம்மை தன்னிறைவாக மாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராஜ்நாத் சிங் வெளியிட்டிருந்த பதிவில், “2023-24 நிதியாண்டில் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சாதனை உயர் அளவாக ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் கவனம் செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசின் கொள்கைகள், முன்முயற்சிகளில் வெற்றிகரமான அமலாக்கத்தை அடுத்து 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத உயர் அளவை எட்டியுள்ளது.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி 2023-24 நிதியாண்டில் சாதனை உயர் அளவாக ரூ.1,26,887 கோடி மதிப்புக்கு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற நிதியாண்டைவிட (2023-24) 16.7 சதவீதம் அதிகமாகும்.
நரேந்திர மோடி தலைமையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களைக் கடந்து வருகிறது. 2023-24-ல் மேற்கொள்ளப்பட்ட மொத்த உற்பத்தி மதிப்பில், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 79.2 சதவீதம். தனியார் துறை பங்களிப்பு 20.8 சதவீதம். பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் 2023-24 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.21,083 கோடியை எட்டியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.