புதுச்சேரி: புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சிக்கல் நிலவி வரும் சூழலில், குறுக்கு வழியில் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று திமுக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
புதுவையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசுக்கு 10, பாஜகவுக்கு 6 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவும், 3 நியமன எம்எல்ஏ-க்களும் உள்ளனர். பாஜக எம்எல்ஏ-க்களில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாகவும், பேரவைத் தலைவராக செல்வமும் பதவியில் உள்ளனர். மீதமுள்ள ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கரன், ஸ்ரீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகிய 7 பேர் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
முதல்வர் ரங்கசாமிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்து வலியுறுத்திவிட்டு வந்துள்ளனர். இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டால் 6 எம்எல்ஏ-க்களை வைத்திருக்கும் திமுக ஆதரவு அளித்தால் மட்டுமே ரங்கசாமி ஆட்சி நீடிக்கும். இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரச்சாரத்தில் இருந்த திமுக மாநில அமைப்பாளர் சிவாவிடம் கேட்டதற்கு, “குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதை எங்கள் கட்சி தலைமை ஒருபோதும் விரும்பாது; ஏற்காது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதை நாங்களும் விரும்பவில்லை.
வரும் காலத்தில் முழுமையான ஆட்சியை அமைப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களும் உள்ளது. எனவே என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி பிரச்சினையை நாங்கள் வேடிக்கை மட்டும் பார்ப்போம். இந்த அரசின் அநீதிக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். இது அவர்களின் உள்கூட்டணிப் பிரச்சினை; சொந்த பிரச்சினை. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் இந்த ஆட்சிக்கான மதிப்பெண்ணை மக்கள் வழங்கிவிட்டனர்,” என்றார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எம்பி-யுமான வைத்திலிங்கத்திடம் இது தொடர்பாக கேட்டதற்கு, “புதுச்சேரி மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ-க்கள் அதிருப்தி என்பது அக்கட்சியின் பிரச்சினை. முதல்வர் ரங்கசாமி மீதான குற்றச்சாட்டு என்பது தேசிய ஜனநாய கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை. ஆகவே ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் சிந்திக்கவேயில்லை,” என்று கூறினார்.