சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரின் மனைவி தன்வந்திரி (23). அருண்குமாரின் சொந்த ஊர் திருவாரூர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் சென்றார் தன்வந்திரி. பின்னர் அவர், கடந்த 11-ம் தேதி இரவு மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சென்னை எழும்பூருக்கு ரயில் வந்ததும் கீழே இறங்குவதற்காக தன்வந்திரி, பேக்கை பார்த்தார். அப்போது அது காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சியிடைந்த தன்வந்திரி, தன்னுடைய பேக்கை ரயில் பெட்டி முழுவதும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தன்வந்திரி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தன்வந்திரியிடம் விசாரித்தனர். அப்போது தன்வந்திரி, தன்னுடன் சகஜமாக இளம்பெண் ஒருவர் தாம்பரம் ரயில் நிலையம் வரை பேசிக்கொண்டு வந்தார். ஆனால் அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது பார்க்கவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார். மேலும் அந்த இளம்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் தன்வந்திரி கூறினார்.
இதையடுத்து ரயில்வே டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் எழும்பூர் ரயில்வே போலீஸார், தன்வந்திரி பயணித்த ரயில் பெட்டியில் யார், யார் பயணித்தார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். அதனடிப்படையில் விசாரித்தபோது தன்வந்திரியுடன் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பூமிகா (23) என்ற இளம்பெண் பயணித்த தகவல் தெரிந்தது. பூமிகாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீஸார், அவர் எந்த ரயில் நிலையத்தில் இறங்கினார் என்பதை சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தன்வந்திரியின் பேக்கை எடுத்துக் கொண்டு பூமிகா சர்வசாதாரணமாக பிளாட்பாரத்தில் நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து தன்வந்திரியிடம் பூமிகாவின் போட்டோவைக் காண்பித்தபோது இந்த இளம்பெண்தான் தன்னுடன் சகஜமாக பேசி வந்த தகவலையும் தெரிவித்தார். அதனால் பூமிகாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தபோது ரயில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. தன்வந்திரியின் பேக்கில் லேப்டாப், ஏடிஎம் கார், பணம் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை போலீஸார் பூமிகாவிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், “கைதான பூமிகா, ரயிலில் முன்பதிவு டிக்கெட் எடுத்து பயணிப்பார். அப்போது மூதாட்டிகள், தனியாக பயணிகள் பெண்களை டார்க்கெட் செய்து சகஜமாக பேசுவார். பின்னர் தனக்கு தலைவலிக்கிறது காபி குடிக்க போகிறேன் உங்களுக்கு வேண்டுமா என்று கூறுவார். அப்போது காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விடுவார். அதைக் குடித்து மயங்கியதும் தங்க நகைகள், செல்போன்கள் என கிடைத்ததை சுருட்டிக்கொண்டு பூமிகா எஸ்கேப் ஆகிவிடுவார். பூமிகா மீது ஏற்கெனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. ரயில் பயணித்தின்போது அறிமுகம் இல்லாதவர்களிடம் உணவு பொருள்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் இந்தக் கும்பலிடம் ஏமாந்துவிடுகிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb