நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டம், மாசர்லா சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மே 13-ம் தேதி தேர்தல் நாளன்று பாலய்யகேட் வாக்கு சாவடிக்குள் புகுந்து, அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார்.
இதனை தடுக்க வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாள் இவரும், இவரது ஆதரவாளர்களும் காரம்பூடி எனும் இடத்தில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை தடுக்க வந்த இன்ஸ்பெக்டரை தாக்கினர். இது தொடர்பாக பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி நெல்லூர் சிறையில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
நம்பிக்கை இல்லை: இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறையிலிருந்த ராமகிருஷ்ணா ரெட்டியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உண்மையான முறையில் வாக்குகள் பதிவாகி இருந்தால் அவர் ஏன் வாக்கு இயந்திரத்தை உடைக்கப் போகிறார். அப்படி நம்பகத்தன்மை இல்லாதபட்சத்தில் வாக்கு இயந்திரத்தை உடைத்ததில் என்ன தவறு இருக்கிறது என்றார்.
இதற்கு நெல்லூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அவர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெகன்பேச்சு அனைவரையும் நகைச்சுவைக்கு ஆளாக்கி வருகிறது.ஒரு முன்னாள் முதல்வர் இப்படி பேசலாமா? வாக்கு இயந்திரத்தை உடைக்க அறிவுரை செய்யலாமா? இது ஜனநாயக இழுக்கு அல்லவா?” என்றார்.
அவரின் இந்த கருத்துக்கு ஆளும் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.