ஹாத்ரஸ்: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 121 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை அன்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, இன்று (வெள்ளிக்கிழமை) ஹாத்ரஸ் வருகை தர உள்ளார் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் சந்திக்கிறார் எனவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அறிவித்தார். அதன்படி ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை ஹாத்ரஸ் வந்தார்.
அலிகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் சந்தித்தார். காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இதனை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை இரண்டு மாத காலத்துக்குள் மாநில அரசிடம் சமர்பிக்கும்.