ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 121 உயிர்களை பலிவாங்கிய சம்பவத்தின் விசாரணை அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 2-ல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவில் போலே பாபா ஆன்மிகக் கூட்டம் நடத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்தார் முதல்வர் யோகி ஆத்தியநாத். இந்த அறிக்கையை அடுத்த 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார். இத்துடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவித்திருந்தார். ஆக்ரா மண்டல ஏடிஜியான அனுபம் குச்ஷித்ரா மற்றும் அலிகர் மண்டல ஆணையரான சைதன்யா.எம் ஆகியோர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையில் சுமார் நூறு பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், அலிகர், ஹாத்ர மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அலுவலர்கள், கிராமத்தினர் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமானவர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உபி முதல்வர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.



பாபா வழக்கறிஞரின் தகவல்கள்: ஹாத்ரஸ் சம்பவத்தில் பலியானவர்கள் விவகாரத்தில் உபி போலீஸார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாக ஹாத்ரஸின் தேவ்பிரகாஷ் மதுக்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் சில பெயர் தெரியாத நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்துக்கு முக்கியக் காரணமான நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபாவின் பெயர் மட்டும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. எனினும், ஹாத்ரஸ் சம்பவத்தில் தம் தரப்பின் புகார்களை எதிர்க்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஏ.பி.சிங் என்பவரை நியமித்துள்ளார்.

அலிகர், ஹாத்ரஸ் சென்று பலியான குடும்பத்தாரிடம் பேசிய ஏ.பி.சிங், சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்துக்கும் சென்றிருந்தார். அங்கு சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்ட ஏ.பி.சிங், பாபாவின் மெயின்புரி ஆசிரமும் சென்றிருந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறும்போது, ‘தலைமறைவான தேவ்பிரகாஷ் மதுக்கர், ஒரு கிரிமினல் அல்ல. அவரது குடும்பதிலும் இந்த விபத்தில் இறப்பு நிகழ்ந்துள்ளது. இதன் இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் மதுக்கர் போலீஸார் முன் ஆஜராவார். இந்த சம்பவத்தால் பாபா மிகவும் கவலை அடைந்துள்ளார். அவரது கிட்னி பழுதாகி ரத்த அழுத்தமும் அதிகரித்துள்ளது. இங்குதான் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் அவர் இருப்பார் என எண்ணுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.