ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), ராணிப்பேட்டை, காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய எட்டுபேரை செம்பியம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மீது எட்டு வழக்குகளும் திருமலை மீது ஏழு வழக்குகளும் திருவேங்கடம் மீது இரண்டு வழக்குகளும் உள்ளன.
கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் பெரம்பூரைச் சேர்ந்த திருமலையும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருக்கும் சிறையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக இருவரும் திட்டம் போட்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்த திருமலை, ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் திருமலைக்கும் அதே ஊர். அதனால் ஆம்ஸ்ட்ராங், வீட்டின் அருகில் உள்ள பள்ளி பகுதியில் ஆட்டோவை சவாரிக்காக நிறுத்துவதைப் போல நின்று ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து பாலுவிடம் தெரிவித்து வந்திருக்கிறார்.
இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நேரம் பார்த்து காரியத்தை இந்தக் கும்பல் கச்சிதமாக முடித்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் வசிக்கும் பகுதியில் வெளிநபர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. அதனால் உணவு டெலிவரி செய்வதைப் போல நடித்து ஆம்ஸ்ட்ராங்கை பிளான் போட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங், பாக்ஸராக இருப்பதால் அவரால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை எளிதில் சமாளிக்க முடியும். அதனால்தான் கொலையாளிகள், ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி அவரின் கணுக்காலில் வெட்டி நிலை குலைய வைத்து கழுத்திலேயே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். அதைத் தடுக்க வந்தவர்களை முதலில் மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி அவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்ற முயன்றதால்தான் அவர்கள் இருவரையும் கொலையாளிகள் வெட்டி சாய்த்திருக்கிறார்கள்.
இதுதவிர இந்தக் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியாக இருந்தார். இவர் மீது கொலை உள்பட இரண்டு வழக்குகள் உள்ளன. தற்போது குன்றத்தூரை காலி செய்து விட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுடன் இருந்தார். ஆற்காடு சுரேஷை கொலை செய்ய பொன்னை பாலு பிளான் போட்டதும் திருவேங்கடமும் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். இவர்களைத் தவிர திருநின்றவூரைச் சேர்ந்த வினோத், அருள், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். ஆற்காடு சுரேஷின் கொலைக்காகதான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் கூறினாலும் அதன் பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.
இந்தநிலையில்தான் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களைச் சந்தித்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், “அரசியல், சாதி ரீதியாக இந்தக் கொலை நடக்கவில்லை. தேர்தல் சமயத்தில் ஆம்ஸ்ட்ராங்கிடமிருந்து பெறப்பட்ட அவரின் லைசென்ஸ் துப்பாக்கியை திரும்ப கொடுத்துவிட்டோம். அதே நேரத்தில் அவரின் உயிருக்கு ஆபத்து என எந்தத் தகவலும் உளவுத்துறையிலிருந்து எங்களுக்கு வரவில்லை” என்றும் கூறினார். அதோடு, இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் முழு விவரம் தெரியவரும்” என்றார்.
போலீஸ் கமிஷனர் இப்படி தகவல் கொடுத்தாலும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாரோ மூன்று தடவை அலெர்ட் மெசேஜ் கொடுத்தோம் என்று சொல்கிறார்கள். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி அஞ்சலியின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னைப் போலீஸார் செய்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88