புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்கும், தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதிலும், அதை முன்னெடுத்துச் செல்வதிலும் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர்.
பரஸ்பரம் பயனளிக்கும் இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கு இரு தரப்பும் பணியாற்றுவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இங்கிலாந்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியில் இந்திய சமுதாயத்தின் நேர்மறையான பங்களிப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்தவும் இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவுக்கு விரைவில் வருகை தருமாறு இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்குப் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் மோடி, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் அதிபராக நீங்கள் (மசூத் பெசெஷ்கியான்) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். நமது மக்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் நலனுக்காக நமது நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதையும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதையும் எதிர்நோக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.