திருவனந்தபுரம்: கடந்த பத்து ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு உள்பட பல்வேறு சர்வதேச சவால்கள் இருந்த போதிலும், இந்தியா ஒரு பிரகாசமான நட்சத்திரமாக மின்னி வருகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், “இது மறக்க முடியாத தருணம் என்பதை நான் அறிவேன். உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்துள்ளனர். முன்னாள் மாணவர்களை நான் வாழ்த்துகிறேன். ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களும் ஒரு சிந்தனைக் குழுவை உருவாக்குகிறார்கள். அந்த சிந்தனைக் குழுக்கள் சில நல்ல சாதனைகளைச் செய்ய முடியும்.
இந்த நிறுவனம் மிகவும் வித்தியாசமானது. இதன் தன்மை வேறுபட்டது. இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளம் உள்ளங்களுடன் கலந்துரையாடுவதற்கான இந்த மதிப்புமிக்க வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாதவை. அதன் பரிமாணங்களை நம்மால் அறிய முடிவதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு புதிராக இருப்பது உங்கள் இதயத்திற்கும் மனதிற்கும் தெளிவாகத் தெரிகிறது.
பல ஆண்டுகால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் உச்சத்தை இன்று அடைகிறீர்கள். பட்டம் பெற்றாலும் நீங்கள் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி. அது ஒருபோதும் நிற்பது அல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில், உலகளாவிய சவால்கள் மற்றும் தொற்றுநோய் பாதிப்பு இருந்தது. ஆனாலும் இந்தியா ஒரு பிரகாசமான நட்சத்திரமாக மின்னி வருகிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியா பற்றி பேசும் போது, 2047-ம் ஆண்டில் உங்கள் ஈடுபாடு குறித்தும் பேசுகிறேன். வளர்ச்சியில் உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
விண்வெளித் துறையில், நமது சமீபத்திய சாதனைகள் உலக அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. 2023-ம் ஆண்டில், சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் -1 உட்பட இஸ்ரோவின் ஏழு விண்கலங்களும் வெற்றிகரமாக அமைந்தன. மொத்தம் 5 இந்திய செயற்கைக்கோள்கள், 46 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அவற்றின் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இவை அனைத்தும் ஒரே ஆண்டில் நடைபெற்றுள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவால் மட்டுமே பெற முடிந்தது.
2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் நீங்கள் ஒவ்வொருவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். முழுமையான நம்பிக்கை மற்றும் உறுதியுடன் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கி நாம் அடி எடுத்து வைக்கிறோம். உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கை அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.