மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முக்கிய வகை, இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme) என்கிற பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களை பார்ப்போம்.
1 வருமான வரிச் சேமிப்பு:
இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரியை சேமிக்க முடியும்.
முதலீட்டாளர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ,
அதற்கேற்ப வரிச் சலுகை கிடைக்கும்.
வரி வரம்பு 5.2 சதவிகிதத்துக்கு ரூ.7,800,
வரி வரம்பு 20.8 சதவிகிதத்துக்கு ரூ.31,200 மற்றும்
வரி வரம்பு 31.2 சதவிகிதத்துக்கு ரூ.46,800 வருமான வரி மிச்சமாகும்.
இது கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை 4 சதவிகிதம் சேர்ந்த வரிக் கணக்கீடாகும்.
2 குறைவான லாக் இன் பீரியட்:
இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இருப்பதிலேயே மிகவும் குறைவான லாக் இன் பீரியட் கொண்ட வருமான வரிச் சேமிப்பு முதலீடு இதுவாகும், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் – 15 ஆண்டுகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் – 5 ஆண்டுகள், தபால் அலுவலக தேசிய சேமிப்பு பத்திரம் – 5 ஆண்டுகள் உள்ளிட்டவைகளின் லாக் இன் பீரியட் ஐந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளன.
3 வசதியான முதலீடு:
இந்த வரிச் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும். அதேபோல் சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்து வரலாம்.
இந்த முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம்; முதலீட்டுத் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளலாம். மொத்த முதலீடு எவ்வளவு வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும்.
4 அதிக வருமானத்துக்கு வாய்ப்பு:
இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்துக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், ரிஸ்க் அதிகம் என்றாலும் மூன்றாண்டு கால லாக் இன் பீரியட் இருப்பதால் அந்த ரிஸ்க் பரவலாக்கப்பட்டு விடுகிறது.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் பிரிவு, 2024 ஜூன் 28 நிலவரப்படி கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 19.97%, 19.52% மற்றும் 15.45% வருமானம் கொடுத்துள்ளது. டாப் 5 ஃபண்ட்கள் கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 25-28%,22-33%,மற்றும் 17-25% வருமானம் கொடுத்துள்ளன. டாப் 5 ஃபண்ட்கள் கொடுத்துள்ள வருமானம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
5 முதலீட்டை மிக நீண்ட காலத்துக்கு தொடரும் வசதி…!
மூன்றாண்டு லாக் இன் பீரியட் முடிந்ததும் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீட்டை வெளியே எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதலீட்டாளர் எவ்வளவு காலத்துக்கு விரும்புகிறாரோ அத்தனை ஆண்டுகள் முதலீட்டை தொடரலாம். அந்த வகையில், இந்த முதலீட்டை ஒருவர் அவரின் பணி ஓய்வுக் காலம், அதன் பிறகும் கூட கொண்டு செல்லலாம். மேலும், மூன்றாண்டு லாக் இன் பீரியட் முடிந்த பிறகு தேவைக்கு ஏற்ப பகுதி பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
லாக் இன் பீரியட் முடிந்த பிறகு தேவைப்பட்டால், அதே இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் அல்லது மற்றொரு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்வது மூலம் மீண்டும் வரிச் சலுகை பெற முடியும். நீண்ட காலத்தில் இந்த ஃபண்டின் மூலம் அதிக தொகை சேர்க்க விரும்புகிறவர்கள். குரோத் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த ஃபண்டை வருமான வரிச் சேமிப்புக்கு என மட்டும் முதலீடு செய்யத் தேவையில்லை. முதலீட்டில் லாக் இன் காலம் இருப்பதால் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர்கள், நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்க கூடியவர்கள், மாணவர்கள் என பலரும் முதலீடு செய்யலாம்.