‘கள்ளச் சாராய கட்சி’ என விமர்சித்த நாதக; கண்டித்த திமுக – போலீஸ் முன்னிலையில் மோதல் @ விக்கிரவாண்டி

விழுப்புரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வாக்குச் சேகரித்த நாதக வேட்பாளர் அபிநயா, எதிர் திசையில் ஏராளமான பெண்களுடன் வாக்குச் சேகரித்துக் கொண்டு வந்த திமுகவினரையும் அவர்களுடன் சென்ற பெண்களையும் பார்த்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.



“ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் 500, 1000 பணத்திற்காக ஏன் இப்படி வந்து தெருவில் நிற்கிறீர்கள்? உங்களை எல்லாம் பார்த்தால் அறியாமையில் நின்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது. கள்ளச்சாராய சாவிற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவினருடன் சென்றால் அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு தான் வந்து சேரும். போடுங்கம்மா ஓட்டு சாராய ஆலையை பார்த்து, போடுங்கம்மா ஓட்டு கள்ளச் சாராயத்தை பார்த்து, போடுங்கம்மா ஓட்டு தாலி அறுக்கற கும்பலை பார்த்து” என அபிநயா பேசினார்.

இப்படி நாதக வேட்பாளர் அபிநயா, செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்படும் திமுகவினரை பார்த்து இப்படி வசைபாடி வருவதால் திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை (வெள்ளிகிழமை) தொரவி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதற்காக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பிரச்சாரம் செய்தபடி வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், வழக்கம் போல திமுகவினரை பார்த்ததும் திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி இருத்தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.