டெக்சாஸ்,
உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் டெக்சாஸில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா – வெனிசுலா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கனடா அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் வெனிசுலா அணி பதில் கோல் திருப்பி 1-1 என சமனுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் கனடா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் 10ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கனடா – அர்ஜெண்டினா அணிகள் மோத உள்ளன.