லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நாளை தமிழ்நாடு வர உள்ளார்.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவர் மற்றும் மாநில கட்சி பிரிவின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் சோகத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறுவதை தடுக்கப்படுவதற்கு அரசு உடனடியாக கடுமையான/தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும், இதுவே வேண்டுகோள்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.